
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்தக் கோயில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 36-வது கோயிலாக இருக்கிறது. அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. மதுரை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்.
கஞ்சமாற நாயனார் அவதரித்த தலம் என்பதால் இதற்கு கஞ்சனூர் என்று பெயர் வந்ததாகவும், மதுராபுரி மன்னர் கம்சராஜன் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு நோயில் இருந்து நிவர்த்தி பெற்றதால் இந்த ஊருக்கு கம்சபுரம் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தேவாரம், பெரிய புராணம் ஆகிய நூல்களில் கஞ்சனூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மனுக்கு திருமணக் காட்சி கொடுத்த தலம் என்பதால் இந்த தலத்திற்கு பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் பல பெயர்கள் இருக்கின்றன.
சுக்கிரனுக்கு பிரகாசம் தெளிவு என்ற அர்த்தங்கள் உண்டு. வெள்ளி கிரகத்திற்கு அதிபதியாக இருக்கிறார். வெண்மையான நிறம் கொண்டவர். தாமரை மற்றும் மணிகளை கையில் ஏந்தியுள்ளார். ஜோதிடத் துறையில், சுக்கிரன் காதல் மற்றும் பாலுணர்வைக் குறிக்கும் கிரகமாக இருக்கிறது. ஒருவர் கலை, செல்வம், இன்பம் மற்றும் இசை மற்றும் நடனம் போன்ற நுண்கலைகளில் சிறந்து விளங்க சுக்ரன் அருள் வேண்டும் என்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் அவர்கள் இயற்கையைப் போற்றுவார்களாக இருப்பார்கள்.
சுக்கிரனுக்கு ‘காலத்திர தோஷ பரிகாரம்’ செய்யும் கோயில் இது. சிவபெருமான் அக்னீஸ்வரர் என்ற பெயரில் இங்கு வீற்றிருக்கிறார். பார்வதி தேவி கற்பகாம்பாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ‘அஷ்டாதிக் பாலகர்களில்’ ஒருவரான அக்னி பகவான் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது, எனவே அக்னீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
ஸ்தல வரலாறு
ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு பாற்கடலை கடைந்தார்கள். அப்படி கடைந்த போது வெளிவந்த அமுதத்தை பருக தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமுமாக நின்றார்கள்.
முதலில் தேவர்களுக்கு அந்த அமிர்தம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு கொடுத்தே அமிர்தம் தீர்ந்து விட்டது. அசுரர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இந்த அமிர்தத்திற்கு அமிர்தசஞ்சீவினி என்று பெயர். இதை சாப்பிட்டால் மரமில்லாத வாழ்வு கிடைக்கும்.
அந்த அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள், தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் எதற்காக இந்த அமிர்தத்தை சாப்பிட்டீர்களோ அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்காது என்றார். தேவர்களை நாடு நகரம் இழந்து, பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார்.
உடனே தேவர்கள் சிவனை வேண்டி நின்றார்கள். சுக்ராச்சாரியார் சாபம் கொடுத்துவிட்டார். அது நீங்க நீங்கள் அருள் புரிய வேண்டும் என்றார்கள். அதற்கு சிவனோ சுக்ராச்சாரியார் மகா சிவபக்தர். அவருக்கு துரோகம் செய்வது சிவனுக்கே துரோகம் செய்ததுபோல் என்றார்.
அதனால் சிவனுடைய வழிபாட்டால்தான் உங்களுக்கு நிவர்த்தி ஆகும். எனவே காவிரி வடகரையில் உள்ள கம்சபுரம் என்ற இடத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரரை வழிபட்டால் சுக்கிரனுடைய சாபதோஷங்கள் நிவர்த்தியாகும் என்றார்.
அதனை கேட்ட தேவர்கள் எல்லா கோயில்களையும் வணங்கிவிட்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து காவிரியில் நீராடி விட்டு கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரரை மனமார வேண்டிக்கொண்டார்கள்.
பிரம்ம தேவர் நடத்திய யாகத்தில் தேவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆகுதிகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான் மட்டுமே ஏற்றார் அக்னி தேவன். இதனால் பாண்டு ரோகம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அக்னி தேவன், பிரம்ம தேவரிடமே நோய் நீங்க வழி கேட்டார். கஞ்சனூரில் அருள்புரியும் சிவ பெருமானை வழிபடும்படி ஆலோசனை வழங்கினார்.
அக்னி தேவரும் இத்தல இறைவனை வழிபட்டு, நோய் நீங்கப் பெற்றார். அக்னி பகவான் வழிபட்டு, நோய் நீங்கியதால் இத்தல இறைவன் அக்னீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். அக்னி பகவான் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர்.
சுவாமியும் அம்பாளும் ஒன்றாக காட்சிக்கொடுத்து சுக்கிர சாபதோஷத்தை நீக்கினார்கள். அதனால்தான் இந்த இடம் சுக்கிரத் தலமாக மாறியது. ஜாதகத்தில் சுக்ர திசை என்பார்கள். ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு மட்டும்தான் 20 வருடம்.
பொதுவாக பேச்சு வழக்கில் ‘உனக்கென்னப்பா சுக்ர திசை நடக்கிறது’ என்பார்கள். சுக்ர திசை என்பது கொடுக்கக்கூடிய திசை. ஆனால் ஜாதகத்தில் சுக்கிரன் தோஷமாக இருந்தால் பலன் கிடைக்காது. அதாவது நீச்சமாகவோ, மறைவாகவோ, சத்ரு ஸ்தானத்தில் இருந்தால் பலன்கள் கிடைக்காது. அவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட சுக்கிர தோஷம் நீங்கும்.
அதுமட்டுமல்லாமல் சுக்கிரன்தான் எல்லாவற்றுக்கும் அதிபதி. சுகபோகாதிபதி, திருமண யோகம் தருபவர், கலத்தரகாரகன். வாகனம், பாக்கிய ஸ்தானம் அனைத்துமே சுக்கிரன் மூலமே கிடைக்கும். அதனால் ஜாதகத்தில் சுக்ர தோஷம் இருப்பவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் அவர்கள் வாழ்வில் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். இதுவே சுக்ர தலத்தின் மகிமை.
மற்றொரு கதையும் இருக்கிறது. விஷ்ணுவுக்கு சுக்ரதோஷம் பிடித்துவிட்டது. அதை போக்க இந்த தளத்தில் வந்து அவதரித்தார். அதைப்பற்றிய புராணவரலாறு இது.
கஞ்சனுரில் வாசுதேவர் என்பவர் செய்த தவத்தினால் மகாவிஷ்ணுவே அவருக்கு மகனாக பிறந்தார். அந்த மகனுக்கு சுதர்சனன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தார். அந்த குழந்தை சிறு வயதில் இருந்தே சிவபக்தி மிக்கவனாக இருந்தான்.
இங்குள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு சென்று தவறாமல் ஈசனை வழிபட்டு வந்தான். அவனது செயலை வாசுதேவர் எத்தனையோ முறை தடுத்தும் பலனில்லை. உணவு கொடுக்காமல் அவனை பட்டினிப் போட்டார்.
இதனால் மனம் வருந்திய அந்த சிறுவன் அக்னீஸ்வரர் கோயிலுக்கு வந்து இங்குள்ள தட்ஷிணாமூர்த்தி முன்பு தியானத்தில் இருந்தான். இறைவனை தொடர்ந்து வழிபட்டான். உணவும் நீரும் இல்லாததால் சோர்வுற்று நிலத்தில் சாய்ந்துவிட்டான்.
அப்போது சிவகணங்களும் முனிவர்களும் சூழ ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் சிவபெருமான் காட்சியளித்தார். அவனை தேற்றி, அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரம் தந்தார். அவனை தனது திருக்கருணையால் பார்த்து, ‘நீ உன் உடல், பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்கு தக்கம் செய்துவிட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சை நாமம் தந்தோம். உனக்கு எல்லா கலைகளையும் யாமே உபதேசிப்போம்.’ என்று அருளி மறைந்தார்.
வீட்டுக்கு சென்ற சிறுவன் தனக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அருளியதை தாய் தந்தையருக்கு எடுத்துரைத்தான். இதை கேட்ட வாசுதேவருக்கு கோபம் உண்டானது. அந்த ஊரில் வாழ்ந்த வைஷ்னவர்கள் ஒன்று கூடி இதை நாங்கள் ஏற்கமாட்டோம்.
இந்த ஊரிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அக்கினி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும். முடியாமல் போனால் தீக்கிரையாக வேண்டும் என்றார்கள்.
ஹரதத்தரும் அக்கினிஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தரிசனமும் ஆத்மார்த்த பூஜையும் செய்து ஈசனை மனமுருக வணங்கிவிட்டு, பெருமாள் கோயிலுக்கு சென்றார். அங்கிருந்த அக்கினி மேல் இருந்த பழுக்க காய்ச்சியிருந்த முக்காலியின் மீது அமர்ந்து சிவனே பரம்பொருள் என்று கூறி இந்த முக்காலி எனக்கு குளிரட்டும் என்று கூறினார்.
வேதங்களும் சிவபார்த்துவம சுலோகங்களை பஞ்சாச்சரத்தையும் கூறினார். முக்காலியின் அனல் குறைந்து குளிர்ந்து போனது. இந்த காட்சியை கண்ட தேவர்கள் மலர் பொழிந்தனர். அங்கிருந்த அனைவரும் ஹரதத்தரிடம் தங்களை மன்னிக்க வேண்டினார்கள். அவர்களை மன்னித்து சிவனை வணங்கி நின்றார். அவரின் சுக்ரதோஷமும் விலகியது.
இங்கு கல் நந்தி புல் உண்ட வரலாறும் இருக்கிறது. ஒரு அந்தணன் ஒரு பசு ஒன்றை அறியாமல் கொன்றுவிட்டான். இதனால் அவனுக்கு பசு தோஷம் பிடித்துவிட்டது. அந்த ஊரில் இருந்த மற்ற அந்தணர்கள் அவனை விலக்கி வைத்தனர்.
செய்வதறியாமல் திகைத்த அந்த அந்தணன் ஹரதத்தரிடம் முறையிட்டான். முறையிடும்போது பஞ்சாச்சரத்தை சொல்லியபடியே சென்றான். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவ பஞ்சாட்சரத்தை சொல்லிவிட்டதால் தோஷம் நீங்கி விட்டதாக சொல்லிவிட்டார். மற்ற அந்தணர்கள் அதை ஏற்கவில்லை. அதை நிரூபிக்க சொன்னார்கள்.
உடனே ஹரதத்தரும் அந்த அந்தணனை அழைத்து காவிரியில் நீராடி, வரும்போது ஒரு கையளவு புல் எடுத்துவந்து இந்த கல் நந்திக்கு தருமாறு கூறினார். அவரும் அவ்வண்ணமே செய்தார். அப்போது ஹரதத்தர் ‘கல் நந்தி புல் சாப்பிடுமேயானால் பஞ்சாச்சரத்தால் தோஷம் நீங்கும்’ என்று புல்லை கல் நந்திக்கு தர அந்த நந்தியும் அதை உண்டதாக ஒரு வரலாறு இருக்கிறது.
மேலும் பராசுரருக்கு சித்தபிரமை நீக்கியது, பிரம்மனுக்கு திருமனக் காட்சி தந்தது, அக்கினிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது, சந்திரனின் சாபம் நீக்கியது, கம்சனின் உடற்பிணி நீக்கியது, கலிகாமனுக்கு திருமணம் நடந்தது என ஏகப்பட்ட வரலாறுகள் நிறைந்ததுதான் கஞ்சனுரில் இருக்கும் அக்னீஸ்வரர் திருக்கோயில்.
கோயில் அமைப்பு
இந்தக் கோயில் அமைந்திருப்பது வடகாவிரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக காவிரி ஆறு கிழக்கு நோக்கிதான் பாயும். ஆனால் இங்கு மட்டும் ஒரு கிமீ தொலைவிற்கு காவிரி வடக்கு நோக்கி பாய்கிறது.
காசியில் எப்படி கங்கை வடக்கு நோக்கி பாய்கிறதோ, அதேபோல் இது வடக்கு நோக்கிய காவிரி. இதற்கு உத்தரவாஹினி என்று பெயர். இப்படி ஆறு வடக்கு நோக்கிப் பாய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
மிகவும் பழமையான இந்தக் கோயில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. ராஜகோபுரம் தெற்கு நோக்கி இருக்கிறது. சுவாமிக்கு நேரே கோபுரம் கிடையாது. ஏனென்றால் கோபுரத்துக்கு நேராக வடக்கு நோக்கி காவிரி வருகிறது.
கோயிலின் நுழைவாயில் தெற்கு திசையில் உள்ளது. அந்த வழியாக உள்ளே சென்றால் முதலாவதாக கொலு மண்டபம் வருகிறது.
பிரகாரத்தை வலம் வந்து மண்டபத்தை அடைந்தால் இடது பக்கம் விநாயகர் சன்னதியும் வலது பக்கம் விஸ்வநாதர் சன்னதியும் உள்ளது. அதன் அருகில் இத்தல இறைவி கற்பகாம்பாள் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
பொதுவாக சுவாமிக்கு இடது பக்கத்தில்தான் அம்பாள் இருப்பார். இந்த தலத்தில் சுவாமிக்கு வலது பக்கத்தில் அம்பாள் இருக்கிறார். இரண்டு சன்னதிகளும் கிழக்கு நோக்கி இருக்கிறது. பிரம்மாவுக்கு திருமணக் காட்சி கொடுத்ததால் சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் இருக்கிறார்கள்.
அம்பாளை தரிசனம் செய்து விட்டு சுவாமி சன்னதிக்கு செல்லும்போது இடதுபக்கத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மஹாவிஷ்ணு, வள்ளி தெய்வானையுடன் முருகன், ஆதி விநாயகர் உள்ளனர். இந்த கோயில் சுக்கிர பகவானுக்கானது என்பதால் அவர் தனி சன்னதியில் விஷேசமாக காட்சி தருகிறார்.
சிவனும் அம்பாளும் தம்பதியராக காட்சி தருகிறார்கள். சிவனே இங்கு அனுக்கிரகம் செய்கிறார். அவருக்குத்தான் அத்தனை வழிபாடும் அர்ச்சனையும் அவருக்குத்தான். அவரை வழிபாடு செய்தால்தான் சுக்ர தோஷம் நிவர்த்தியாகும்.
இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப்படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் அமைந்துள்ளன. இங்கு நடராஜர் கற்சிலையாக இருக்கிறார். மற்ற ஆலயங்களில் உற்சவராகத்தான் இந்த நடராஜரை பார்க்க முடியும்.
சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி, காட்சி அளித்த காட்சிகளுக்கு இங்கு சிற்பங்களாக உள்ளன.
இந்தக் கோயிலின் மூலவரான அக்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் சனீஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர், அக்கினி பூஜித்த லிங்கம், நவக்கிரக சன்னதி, நால்வர் திருமேனிகள் உள்ளன.
அதற்கடுத்து சுரைக்காய் பக்தர் மனைவியுடன் காட்சி தருகிறார். அதனைத்தொடர்ந்து பள்ளியறை, ஆதி கற்பகாம்பாள், ஆடிப்பூர அம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
பலன்கள் பரிகாரங்கள்
இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. சோகை நோய் உள்ளவர்கள், சித்த பிரமை பிடித்து, மனநிலை பாதித்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனநிலை சமம் பெறும்.
பொதுவாக சுக்ரன்தான் கண்களுக்கு அதிபதி. அதனால் கண் நோய்கள் தீர இங்கு வந்து சுவாமி அம்பாளை வழிபட்டு சுக்ரனுக்கு பூஜை செய்தால் நிவர்த்தியாகும்.
அதோடு ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்ரதோஷம் இருந்தால் அவர்கள் இந்த கோயிலுக்கு வந்து சுக்கிரனை வழிபட தோஷம் நீங்கும். அவர்கள் சோம அபிஷேகம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அல்லது அவர்கள் நட்சத்திர தினத்தில் வழிபடுவது நல்ல பலனை தரும். ஹோமம் செய்தால் மேலும் சிறப்பு.
தொழில் விருத்தி, செல்வம் புகழ் சேர முக்கியமாக இருப்பவர் சுக்ர பகவான். வெள்ளிக்கிழமைகளில் சுக்ரபகவானுக்கு 20 நெய் தீபம் ஏற்றி வழிபடுவது தோஷத்தை நீக்கும். அதேபோல் பல வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இங்கிருக்கும் பலா மற்றும் புரசு மரங்கள் இத்தல விருட்சமாக போற்றப்படுகின்றன. இத்தல விருட்சத்தை ஒரு மண்டல காலம் 16 முறை சுற்றி வந்து வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.
பூஜைகள் திருவிழாக்கள்
தினசரி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகின்றன. இங்கு மாசி மகம், மஹாசிவராத்திரி, பிரமோட்சவம், ஆருத்ரா தரிசனம், நவராத்திரி, சஷ்டி, போன்ற விழாக்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் இங்கு நடைபெறும் ஹரதத்தர் காட்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தரிசன நேரம்
காலை 7.30 முதல் மதியம் 12 மணிவரை
மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரை
இருப்பிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அருகிலிருக்கும் நகரம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து 18 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 20 கிமீ தொலைவிலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இரண்டு நகரங்களுமே சாலை மற்றும் ரயில் வசதி கொண்டது.
கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் கஞ்சனூர் வழியாக இயக்கப்படுகின்றன. அதுபோக கார் மற்றும் ஆட்டோ மூலம் சென்றடையலாம். அருகிலிருக்கும் விமான நிலையம் திருச்சி. 116 கிமீ தொலைவில் உள்ளது.
முகவரி
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோவில்
ஆடுதுறை - குத்தாலம் சாலை, கஞ்சனூர் - 609804
தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைப்பேசி - +91-435-247 3737