அருள்மிகு சௌந்தரராஜா பெருமாள் திருக்கோவில்
தாடிக்கொம்பு, திண்டுக்கல் மாவட்டம்.
ஒரு கோவில் திருமண வரம், புத்திர யோகம், உடல் ஆரோக்கியம், கல்வி ஞானம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்து, கடன் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அந்த கொடுப்பினையை இங்கு வரும் பக்தர்களுக்கு தவறாமல் வழங்கி வருகிறது இந்த ஆலயம்.
இந்த ஆலயத்தின் பெயர் அருள்மிகு சௌந்தரராஜா பெருமாள் திருக்கோவில். இது திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு என்ற ஊரில் அமைந்துள்ளது. தாடிக்கொம்பு என்ற தெலுங்கு பெயருக்கு ‘பனைமரக்கூட்டம்’ என்று அர்த்தம். இங்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் இருந்ததால் தெலுங்கு பெயரே ஊருக்கு வைத்துவிட்டார்கள். புராணங்கள் இந்த ஊரை தாலவனம், தாலபுரி என்று அழைக்கின்றன.
16-ம் நூற்றாண்டுகளில் திண்டுக்கல் ஒரு யுத்த பூமியாக இருந்தது. அடிக்கடி போர்கள் நடந்து கொண்டே இருந்தன. அதனால் நிறைய மக்கள் பாதுகாப்பை தேடி இங்கு வந்து குடியேறினார்கள். அப்போது இந்த ஊரைச் சுற்றி பெரிய மதில் சுவர்கள் இருந்தன. அந்த சுவர் ஊரை காப்பாற்றியது. மக்களை பாதுகாத்தது. தங்களுக்கு அடைக்கலம் தந்த இறைவனை கொண்டாடினார்கள்.
கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தொடக்கத்தில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர நாயக்கர் மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் சொல்கின்றன. அந்த மன்னர்களின் பெயர் அச்சுததேவராயர், ராமதேவராயர். திராவிடக் கட்டிடக்கலையின் பாணியில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு விஷ்ணு சௌந்தரராஜ பெருமாள் என்றும், அவரின் மனைவி லட்சுமி சௌந்தரவல்லி என்றும் வணங்கப்படுகிறார்கள். குடகனாற்றின் கிழக்கு கரையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் குடனாற்று நீரே தீர்த்தமாக வழங்கப்பட்டது. இப்போது கோவிலுக்குள் இருக்கும் புனித அக்னி தீர்த்த கிணற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு தீர்த்தமாக வழங்கப்படுகிறது.
புராண வரலாறு
முற்காலத்தில் இங்கு ‘மண்டூக மகரிஷி’ என்ற ஒரு முனிவர் இருந்தார். மண்டூகம் என்றால் தவளை. ஒரு சாபத்தின் காரணமாக அவர் தவளையாக மாறிப்போனார். தன் சாபம் நீங்க வேண்டும் என்று இந்த இடத்தில் மகாவிஷ்ணுவை வேண்டி ஆழ்ந்த தவமிருந்தார். அப்போது தாளாசூரன் என்ற ஒரு அசுரன் அந்த தவத்தை கெடுக்கும் விதமாக முனிவருக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்தான். இதனால் தவம் தடைபட்டது.
அசுரனிடமிருந்து தன்னை காக்கும்படி முனிவர் மதுரை கள்ளழகரை வேண்டினார். பக்தனின் வேண்டுதல் கேட்டு அவர் முன் காட்சி கொடுத்த கள்ளழகர் அந்த அசுரனை அழித்தார். முனிவரை காப்பாற்றினார். மண்டூக மகரிஷி விஷ்ணுவை இங்கேயே தங்கும்படி கேட்டார். மகாவிஷ்ணுவும் சம்மதித்தார். சௌந்தரராஜ பெருமாள் என்ற நாமத்துடன் இங்கே எழுந்தருளினார்.
‘வடக்கு வீடான புறமலை தாடிக்கொம்பு அழகர்’ என்று கல்வெட்டு குறிப்பிடுவதுபோல் மதுரை அழகர் கோவிலில் இருக்கும் அத்தனை சிறப்புகளும் இந்த ஆலயத்திற்கும் உண்டு. மதுரை கள்ளழகரை தரிசிக்க முடியாதவர்கள் இங்கிருக்கும் பெருமாளை தரிசித்தாலே அந்த பலன்கள் முழுமையாக கிடைக்கும். அழகர் கோவிலில் செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன்களை இந்தக் கோவிலில் செலுத்தலாம்.
கோவில் அமைப்பு
கோவிலை வெளியில் இருந்து பார்க்கும்போது அது சிறிய கோவிலாகவே தெரிகிறது. ஆனால் இது 1.5 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பெரிய கோவில்தான். கிழக்கு நோக்கி இருக்கும் சிறிய கோபுர வாசலை கடந்ததும், சிறியதாக ஒரு நாலு கால் மண்டபம் வருகிறது. அதற்கடுத்து கருங்கல்லினால் ஆன தீபஸ்தம்பம் வருகிறது.
அதற்கடுத்து 90 அடி உயரம் கொண்ட ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம் வருகிறது. இதில் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ராஜகோபுரத்தை கடந்து சென்றால் கொடிமரமும் பலிபீடமும் வருகிறது. விழாக்காலங்களில் இங்கு கொடியேற்றப்படுகிறது.
கொடிமரத்திற்கு எதிரே தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. அதனை அடுத்து விச்வக்சேனர் சன்னதி சிறியதாக உள்ளது. சைவர்கள் விநாயகரை வணங்கிய பின் தான் எந்த ஒரு செயலையும் செய்வார்கள். அதேபோல் வைணவர்கள் இந்த விச்வக்சேனரை வணங்கிய பின்தான் மற்ற தெய்வங்களை வணங்குவார்கள்.
நான்கு பிரகாரங்களை கொண்ட இந்த திருக்கோவிலில் சன்னதிகள், மண்டபங்கள், நுட்பமான சிற்பங்கள், வண்ண சுவரோவியங்கள் காணப்படுகின்றன. கொடிமரத்தை கடந்து உள்ளே போனால் சௌந்தரராஜ பெருமாள் சன்னதி வருகிறது. சன்னதியின் வாயிற் காவலர்களாக ஜெயன், விஜயன் என்ற தூவாரபாலகர்கள் இருக்கிறார்கள்.
அதற்கடுத்து சதுர வடிவில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் வேண்டுவோருக்கு வேண்டிய வரங்கள் வழங்கும் விதமாக அருள்பாலிக்கிறார். இந்த கருவறை ஒரு கலசத்துடன் கூடிய விமானம் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கருவறையின் சுற்று பிரகாரச் சுவர்களில் திருமாலின் தசவாதார காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மூலவருக்கு எதிரே கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். கருட வாகன தரிசனம் நமது அனைத்து பாவங்களையும் தீர்க்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
திருக்கோயில் பிரகாரத்தின் தென்புறத்தில் அருள்மிகு கல்யாணசௌந்தரவல்லி தாயார் சன்னதி உள்ளது. மகாலட்சுமியே கல்யாணசௌந்தரவல்லி தாயாராக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை மனதார வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளி வழங்குவார்.
பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சன்னதி உள்ளது. தனி விமானம் கொண்ட இந்த சன்னதியில் ஆண்டாள் மூலவர், உற்சவர் என்ற நிலையில் காட்சியளிக்கிறார். ஆண்டாள் மீது மிகுந்த பக்திக்கொண்ட விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் வைணவத் தலங்களில் ஆண்டாள் சன்னதியை ஏற்படுத்தினார். அதன்படியே இங்கும் ஆண்டாளுக்கு தனி சன்னதி உருவாக்கப்பட்டது.
ஆண்டாள் சன்னதியின் வெளிபுறச்சுவர்களில் தசாவதார சிற்பங்கள் அம்சமாக செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோவிலின் நான்காம் பிரகாரத்தின் தென்மேற்கு திசையில் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஐந்து ஆயுதங்களில் முதன்மையானது சுதர்சனம் எனும் சக்கரத்தாழ்வார். கருவறையில் அறுகோண வடிவில் சமபங்க நிலையிலும், மறுபக்கம் யோக நரசிம்மராகவும் காட்சி தருகிறார். நரசிம்மரை சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் இருப்பது அரிதான காட்சியாகும். தொழில் பிரச்சனைகளை தீர்க்க சனிக்கிழமைகளில் இவரை வழிபடுவது நல்லது.
ஆழ்வார்களின் தலைவராக திகழும் நம்மாழ்வாருக்கும் இங்கு தனி சன்னதி இருக்கிறது. கோவில் திருவிழாக்களை கொண்டாடுவதற்கென்று இங்கு பல மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊஞ்சல் மண்டபம், மகாமண்டபம், அரங்க மண்டபம் போன்ற மண்டபங்கள் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
தாயார் சன்னதியின் முன்னாள் உள்ள அரங்க மண்டபம் சிற்பக்கலைக்கு பெயர்பெற்றது. அந்தக் கால சிற்பிகள் கூட தாடிக்கொம்பு, தாரமங்கலம் சிற்பங்களை போல் வடிவமைக்க முடியாது என்றுதான் சொல்வார்களாம். அத்தனை நுணக்கங்கள் நிறைந்தது இங்குள்ள சிற்பங்கள். சிற்பங்களின் விரல் நகங்கள், ஆடைகளின் வடிவமைப்பு, அணிகலன்கள் நுண்ணிய வேலைப்பாடு, முகங்களில் தெரியும் உணர்ச்சிகள் என்று சிற்பங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டமாக இருக்கின்றன.
இந்த மண்டபத்திலுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஏழு அடி முதல் ஒன்பது அடி உயரம் கொண்டவையாக இருக்கின்றன. சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர், ஊர்த்தவதாண்டவர், இரண்ய யுத்தம், மன்மதன், உலகளந்த பெருமாள் முதலான ஏழு சிற்பங்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. கார்த்தவீரிய அர்ஜுனர், மகாவிஷ்ணு, அகோர வீரபத்திரர், தில்லைக்காளி, இரண்ய சம்ஹாரம், ரதி, வேணுகோபாலன் ஆகிய ஏழு சிற்பங்கள் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் சிற்பக்கலையின் உச்சம் என்று சொன்னால் அது மிகையல்ல.
இதுபோக பிரகாரங்களில் இரட்டை விநாயகர் சிற்பங்கள் உள்ளன. திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக இரட்டை விநாயகர் சிலை இருப்பது இங்குதான். இதில் ஒரு விநாயகரை ‘ஆனந்த விநாயகர்’ என்றும், மற்றொருவரை ‘விக்னம் தீர்க்கும் விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.
கலைமகளின் குருவான ஹயக்ரீவர் திருமால் அவதாரங்களில் ஒருவர். கல்வி ஞானம் தருபவர். திருவோண நட்சத்திரம் அன்று தேன் அபிஷேகம் செய்தால் கல்வியில் மேன்மை கிடைக்கும். வாணி என்று அழைக்கப்படும் சரஸ்வதியும் இங்கு காட்சி தருகிறார்.
மருத்துவக் கடவுளாக போற்றப்படும் தன்வந்திரி இங்கு காட்சி தருகிறார். அமாவாசை அன்று மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடைபெறுகிறது. இவருக்கான மந்திரத்தை கூறி வழிபட்டால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறலாம்.
மேலும் இங்கு லட்சுமி நரசிம்மர், வேணுகோபால சாமி, ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். இந்தக் கோவிலின் தனிச் சிறப்புகளில் ஒன்று என்னவென்றால் இங்கிருக்கும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்.
பொதுவாக சிவாலங்களில் மட்டுமே பைரவர் காணப்படுவார். ஆனால் விஷ்ணு ஆலயமான இங்கு பைரவர் இருப்பது மிகவும் சிறப்பு. இழந்த சொத்துக்களை திரும்ப பெறவும், பொருளாதார சிக்கல்கள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும், சனீஸ்வரனால் ஏற்படும் கஷடங்களில் இருந்து விடுபடவும் இந்த பைரவர் அருள் புரிகிறார். அதனால்தான் இவருக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலங்களில் விஷேச பூஜை பைரவருக்கு நடத்தப்படுகிறது. அதேபோல் தேய்பிறை அஷ்டமியிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. அந்நாட்களில் வெளியூர்களில் இருந்து பல பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்.
திருவிழாக்கள்
இங்கு நடைபெறும் முக்கியமான திருவிழா சித்திரைப் பவுர்ணமி விழாவாகும். இந்த விழா ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவது போல் பவுர்ணமி நாளன்று இத்தல பெருமாளும் குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆடிப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. உற்சவர் வாகனங்களில் வீதி உலாவாக வருகிறார். புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்ச்சத்திரத்தில் லட்சதீப வழிபாடு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு முக்கிய நிகழ்வாக நடைபெறுகிறது.
இதுபோக ஒவ்வொரு மாதமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாளுக்கு திருவோண நட்சத்திர பூஜையும், ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அமாவாசை பூஜையும், ஸ்ரீ லட்சுமி நசிம்மர் சுவாமிக்கு சுவாதி நட்சத்திர பூஜையும், ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு ரோகிணி நட்சத்திர பூஜையும் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று காலை 8.30, 10.30, பிற்பகல் 12.30, 3.30, மாலை 5.30, இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிறு தோறும் மாலை 5 மணியளவில் ராகு கால பூஜையும் நடைபெறுகிறது.
வெகுநாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்காகவே ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரங்க மண்டபத்திலுள்ள ரதி, மன்மதன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி, மணவாழ்க்கை அமையும்.
இத்திருக்கோவில் உள்பிரகாரத்தில் வெள்ளித் தேரோட்டம் தினசரி மாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது. தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.
பூஜை காலங்கள்
காலை 6.45 மணி விஸ்வரூபம்
காலை 8.30 மணி காலசந்தி
காலை 11.30 மணி உச்சிக்காலம்
மாலை 7.30 மணி சாயரட்சை
நடை திறந்திருக்கும் நேரம்
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோவிலுக்கு எப்படி செல்வது?
திண்டுக்கல் நகரில் இருந்து 10 கிமீ தொலைவில் தாடிக்கொம்பு அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 10 கிமீ தொலைவிலும், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் திண்டுக்கல் – கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திண்டுக்கல் நகரில் இருந்து நகரப் பேருந்து மூலமும் கார் மூலமாகவும் இங்கு வரலாம்.
அருகிலுள்ள விமான நிலையங்கள்: மதுரை, திருச்சிராப்பள்ளி. மதுரை விமான நிலையம் 96 கிமீ தொலைவிலும் திருச்சி விமானநிலையம் 114 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அறங்காவலர் குழு தலைவர்
ம.தீ.விக்னேஷ் பாலாஜி
தலைமை அர்ச்சகர்
ராமமூர்த்தி பட்டாச்சாரியார்
அலுவலகம்:
அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில் அலுவலகம்,
தாடிக்கொம்பு-624 709
திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண்: 0451-2911000.
கைபேசி எண்: 99434-17289 (மணியம் அரவிந்தன், உதவி அர்ச்சகர்)