அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

Dec 6, 2025 | Temple Story – Tamil

 

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

ஜம்பை, கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஜம்புகேஸ்வரர் கோயில் ஓர் ஆன்மிக அருள் நிறைந்த கோயில் மட்டுமல்ல. இது பல வரலாற்றுத் தகவல்களை தன்னுள்ளே கொண்டுள்ள அற்புதக் கோயில். பாரம்பரியத் தொன்மைக்கும், கலாசார பெருமைக்கும் சான்றாக திகழும் ஒரு கோயில்.

அமைவிடம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் கொஞ்சும் ஊர்தான் ஜம்பை. சோழர்கள் காலத்தில் இந்த ஊருக்கு ‘வீர ராஜேந்திர சோழபுரம்’ என்ற பெயர் இருந்தது. அதன் பின்னர் ‘வாளையூர்’ என்று அழைக்கப்பட்டது. தற்போது ஜம்பை என்றானது.

இது தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் சிறுசிறு குன்றுகளும், மலையும், நெல் வயல்கள் சூழ்ந்த வளமான ஊர். நடுநாட்டின் தலைநகராக விளங்கியத் திருக்கோவலூருக்கு வடமேற்கில் 19 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலைக்கு கிழக்கில் 25 கிமீ தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று தொன்மைகளைக் கொண்ட ஊர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊர் மிகப்பெரிய நகரமாக இருந்திருக்கிறது. அரண்மனையும், கோட்டையும், ஊர் முழுவதும் பல்வேறு கோயில்களையும் கொண்ட நகரமாக வாளையூர் விளங்கியுள்ளது. காலமாற்றத்தில் இன்று சிற்றூராக காட்சியளிக்கிறது.

இங்கு அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றி நான்குபுறம் பெரிய மதில் சுவர் உள்ளது. தெற்கு மதில் சுவர் தென்பெண்ணை ஆற்றின் வடகரையிலும், வடக்கு, கிழக்கு, மேற்கு மதில்கள் ஊரை ஒட்டியும் அமைந்துள்ளன.

இக்கோயில் மூலவர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், ஸ்ரீ ஜம்புநாதேஸ்வரர், ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் என்ற நாமங்களில் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.

ஸ்தல வரலாறு

விஜயாலயச் சோழன் ஆட்சிக் காலத்தில் இந்த ஊருக்கு வாளையூர் என்ற பெயர் இருந்தது. இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது. அதுவே இந்த ஆலயத்தின் ஸ்தல வரலாறாகவும் உள்ளது.

இந்த ஊரை செழிப்பாக வைத்திருக்கும் தென்பெண்ணை ஆற்றின் ஓரத்தில் ஒரு மடுவு இருந்ததாம். அந்த மடுவில் வாளை மீன் உருவில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரை வாளை மாமுனிவர் என்று புராணம் சொல்கிறது.

முனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமானை சுயம்புவாக தோன்றிய ஒரு சிவலிங்க வடிவில் காட்சி கொடுக்கிறார். இப்படி தானாக தோன்றிய சிவலிங்கத்தை வாளை மாமுனிவர் தினமும் பூஜித்து வந்ததார். அவர் இந்த மடுவை விட்டு வெளியே வருவதில்லை.

ஒருநாள் ஆற்றின் ஓரத்தில் இருந்த அந்த மடுவிற்கு அரண்மனை பட்டத்து யானை வந்தது. அது சேற்றில் இறங்கி விளையாடியது. அந்த விளையாட்டு வாளை மாமுனிவரின் பூஜைக்கு இடையூறாக இருந்தது.

மறுநாளும் அதேபோல் அந்த யானை வந்து தொந்தரவு செய்தது. கடுங்கோபம் கொண்ட வாளை மாமுனிவர் தனது வாளால் யானையின் துதிக்கையை ஓங்கி அறைந்தார்.

யானை அலறி துடித்துக்கொண்டு பிளிறியபடி அரண்மனைக்கு ஓடிச் சென்றது. செய்தியறிந்த மன்னன் யானையைப் பார்க்கிறான். பட்டத்து யானையை அடிக்கும் அளவுக்கு யார் இங்கு பெரிய பலசாலி என்று கோபம் கொண்டான்.

ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்தனர். அந்த யானை அனைவரையும் மடுவுக்கு மீண்டும் கூட்டி வந்தது. அந்த மடுவில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காக தனது வீரர்களை மடுவில் இறங்கும்படி மன்னன் உத்தரவிட்டான்.

வீரர்கள் உள்ளே இறங்கி பார்க்கிறார்கள். அங்கே வாளை மீன் அமைதியாக சிவலிங்கத்தை வழிபட்டுக்கொண்டிருந்தது. மன்னன் வியந்து போகிறான். ஒரு வாளைமீன் அடித்து பட்டத்து யானை எப்படி காயம்பட்டது? என்று ஆராய்ந்து பார்க்கிறான்.

அமைச்சர்களை கூப்பிட்டு கேட்கிறான். அப்போது அமைச்சர்கள், ‘இது சாதாரண மீன் கிடையாது. இறைவனின் அருள் பெற்ற வாளை மாமுனிவர். இவர் நீண்டகாலமாக இங்கே தவம் செய்கிறார். அவருக்கு நமது பட்டத்து யானை இடையூறு செய்ததால்தான் முனிவர் அதை தண்டித்தார்.’ என்று கூறினர்.

வீரர்கள் மன்னன் ஆணைக்கு இணங்கி மடுவில் இறங்கி, சேற்றை அகற்றினார்கள். அப்போது சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்த சிவலிங்கத்தை எடுத்து அந்த இடத்தில் ஒரு சிவாலயத்தை கட்டினான். அதுதான் ஜம்புகேஸ்வரர் கோயில். இந்த சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியதால் இந்த இறைவனை பழைய கல்வெட்டுகள் எல்லாம் தான்தோன்றீஸ்வரர் என்றே அழைக்கின்றன.

மன்னன் சிவனுக்கு மட்டுமல்லாது அருகே அகிலாண்டேஸ்வரிக்கும் சிறிய ஆலயத்தை அமைத்தான். இப்பகுதியில் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் நிறைய இருப்பதால் இந்த மடுவின் அருகில் அரண்மனையும் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சோழர்கள் காலத்தில் இந்த ஊர் மிகப்பெரிய நகரமாக இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

கோயில் அமைப்பு

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர்ப் பேரரசு என்று பல்வேறு மன்னர்களின் பங்களிப்பு இந்தக் கோயில் கட்டுமானத்தில் இருக்கிறது. இக்கோயில் ஊர் மட்டத்தை விட பள்ளத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அந்த மடுவு இருந்ததே கோயில் பள்ளமாக இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தக் கோயில் உள்ளே செல்வதற்கு இரண்டு நுழைவுவாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில்தான் பிரதான நுழைவாயில். ஆனால் ஊர் மக்கள் வடக்கு திசையில் உள்ள வாசலையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

வடக்கு நுழைவுவாயிலில் கோபுரம் கட்டுவதற்காக செவ்வக வடிவில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதை மொட்டைக் கோபுரம் என்று அழைக்கிறார்கள்.

இந்தக் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால் பாரம்பரியமிக்க கோயிலை அடையலாம். இக்கோயில் இரண்டு மதில்கள், இரண்டு கோபுரங்கள், இரண்டு திருச்சுற்றுகள் கொண்ட கோயில்.

வடக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் வலதுபுறம் அம்மனின் சன்னதியும் அதற்கு முன் நந்திக்கான மண்டபமும் இருக்கிறது. இடது புறம் வெளி திருச்சுற்று மண்டபம் உள்ளது. அதற்கடுத்து பெரிய சிவன் கோயில் உயரமான மதில் சுவர்களுடன் தனியாக உள்ளது.

அந்த உள் கோயிலின் கிழக்கு நுழைவாயில் மூன்று நிலை கொண்ட கோபுரத்துடன் அழகாக காட்சி தருகிறது. கோபுரத்துக்கு எதிராக கொடிமரமும் பலிபீடமும் உள்ளன. திருச்சுற்றின் தெற்கு பக்க மண்டபத்தில் விநாயகப் பெருமான் காட்சி தருகிறார்.

பிரதான தெய்வமான சிவன் கோயிலின் கிழக்கு வாசல் மூன்று நிலை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தின் இருபுறமும் சுதையிலான துவார பாலகர்கள் நிற்கிறார்கள். அவர்களை சுற்றி தேவகணங்கள் கூட்டமாக உள்ளனர்.

இக்கோபுரத்தை தாங்கும் இரு செவ்வக தூண்களிலும் பக்கத்துக்கு ஒருவராக இரண்டு கொடிப் பெண்கள் நம்மை வரவேற்கிறார்கள். தலைமுடியை தூக்கி கொண்டையாக கட்டிக்கொண்டு, காதுகளில் குதம்பை ஆபரணத்தை அணிந்து, ஒரு காலை தரையில் ஊன்றி, மறு காலை தூணில் சாய்த்துக்கொண்டு புன்னகை ததும்பும் முகத்துடன் காணப்படுகிறார்கள்.

கோபுரத்தின் உள் நுழைந்ததும் மேடைகளின் மூலையில் இரு சிங்கத் தூண்கள் உள்ளன. இரண்டும் முற்கால சோழர்கள், பல்லவர் காலங்களை கண் முன் கொண்டு வருகின்றன. சிங்கம் வாயைத் திறந்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டிருக்கிறது. அதன் தலை மீது தூண் அமைந்துள்ளது. இது சிற்பக்கலையின் உச்சம் என்று சொல்லலாம்.

இதைக் கடந்ததும் மகாமண்டபம் நம்மை வரவேற்கிறது. சோழர்கால அமைப்பைக் கொண்ட இந்த மண்டபம் 34 தூண்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தூணும் 12 அடி உயரம் கொண்டது. அதற்கடுத்து அர்த்த மண்டபம் இருக்கிறது. இதில் வடக்கே விஷ்ணு துர்க்கையும், தெற்கே விநாயகப் பெருமானும் உள்ளனர்.

அடுத்து கருவறையில் இறைவன் ஜம்புகேஸ்வரர் வீற்றிருக்கிறார். கருவறையின் மேலே இரண்டு தளம் கொண்ட விமானம் அமைந்துள்ளது. இது செங்கற்களால் கட்டப்பட்டு சுதை சிற்பங்களால் அழகு படுத்தப்பட்டிருக்கிறது. கருவறையின் நடு மையமாக சிவலிங்கம் சிறப்பாக தரிசனம் தருகிறது.

கருவறையில் மூன்று தேவகோட்டங்கள் உள்ளன. வடக்கே பிரம்ம தேவனும், தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரும் இருந்து அருள் புரிகின்றனர். பிரம்மதேவன் நின்ற நிலையில் நான்கு முகங்களுடன் தலையில் கீரிடம் சூட்டியபடி காட்சியளிக்கிறார்.

விங்கோத்பவர் கிரீடமகுடத்துடன் காட்சியளிக்கிறார். சிவனின் முடியைத் தேடி பிரம்மா பறக்க, திருமால் சிவனின் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து செல்வதாக செதுக்கப்பட்டுள்ளது.

ஆலமரத்தின் அடியில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். வலது காலை மடக்கி பூதத்தின் மீது வைத்தபடியும், வலது பின்ணங்கை பாம்பையும், முன் கை அபய முத்திரையுடனும், இடது பின் கையில் அக்னி ஏந்தியும், முன்கையில் கபாலத்தியும் வைத்தபடி காட்சி தருகிறார்.

சிவன் கோயிலுக்குள் ஒரு உள் திருச்சுற்று மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபம் மகாமண்டபம், முன் மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை ஆகிய அனைத்துப் பகுதிகளையும் சுற்றி வரும் வண்ணம் இந்த திருச்சுற்று மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சுற்று மண்டபத்தின் வடக்கு பக்கம் 14 தூண்களும், தெற்குப் பக்கத்தில் 14 தூண்களும் உள்ளன. பரிவார சன்னதிகள் உள்ள மேற்குப் பகுதியில் 10 தூண்களும் உள்ளன. திருச்சுற்று மண்டபத்திற்கு எதிரே கிழக்கு பக்கமாக மடைப்பள்ளி அமைந்துள்ளது.

மடைப்பள்ளிக்கு அருகே நான்கு தூண்கள் கொண்ட சிறிய மண்டபம் ஒன்றுள்ளது. இங்கு மொத்தம் 12 பரிவார சன்னதிகள் உள்ளன. அதில் ஒன்று வெற்றிடமாக இருக்கிறது. பார்வதி சிற்பம் ஒன்று சிதைந்துபோன நிலையில் உள்ளது. காசிவிஸ்வநாத கோயிலிருந்து இங்கு கொண்டு வந்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

பார்வதி தேவிக்கு அடுத்து மூத்ததேவி என்று சொல்லப்படும் ஜேஷ்டாதேவி சிற்பம் இருக்கிறது. அமர்ந்த நிலையில் இந்த சிற்பம் உள்ளது. கம்பீரமான உருவம், மேலே காக்கைக்கொடி பறக்கிறது. தலையில் கரண்டை மகுடம் தாங்கி, காதில் பத்ரகுண்டலம் அணிந்துள்ளாள்.

கச்சை இல்லா மார்பின் நடுவே பூணல் உள்ளது. வலது கையில் மலரினைப் பிடித்தபடி இடக்கையை தொடை மீது வைத்தபடி அமர்ந்த நிலையில் காட்சித் தருகிறாள். அருகே துணையாக ஒரு பெண்ணும் நந்தியும் உள்ளனர்.

இதற்க்கு அடுத்துள்ள இரண்டு பரிவார சன்னதிகளிலும் ஆவுடையாருடன் லிங்கங்கள் உள்ளன. வெளியே நந்திகள் இருக்கின்றன. அதற்கடுத்த சன்னதியில் முருகன், வள்ளி, தெய்வானை நின்ற நிலையில் காட்சியளிக்கின்றனர்.

பக்கத்து சன்னதியில் முருகர் மட்டும் தனியாக உள்ளார். அடுத்த சன்னதி வேற்று சன்னதியாக இருக்கிறது. அதற்கடுத்து ஸ்ரீதேவி, விஷ்ணு, பூதேவி நின்றநிலையில் தரிசனம் தருகின்றனர். அடுத்த அடுத்தடுத்த சன்னதிகளில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் உள்ளனர்.

கருவறை வெளிச்சுவரில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், துவார பாலகர்கள் காட்சி தருகிறார்கள். இந்த துவார பாலகர்கள் 12 அடி உயரத்தில் நின்றநிலையில் கம்பீரமாக காவல் புரிகிறார்கள்.

இந்தக் கோயிலிலுள்ள அனைத்து சிற்பங்களும் மிக நேர்த்தியானவை. அவற்றில் உச்சம் என்று மகிஷாசுரமர்த்தினியை சொல்லலாம். இந்தச் சிற்பம் மேலை சாளுக்கியரின் அற்புத படைப்பாகும்.

தலையில் கரண்ட மகுடம், காதில் குண்டலம், கழுத்தில் கழுத்தாராம் பூண்டு, தலையில் ஒளிவட்டத்துடன் காட்சி தருகிறாள். கச்சை அணியாத மார்பகம், அந்த மார்பகத்தின் நடுவே பூணூல், முகத்தில் கோபம் என்று மகிஷனுடன் போரிடும் நிலையில் இருக்கிறாள்.

முதுகின் இருபுறமும் அம்புகூடுகள் உள்ளன. வலது முதல் கை அம்பை உருவியும், இரண்டாம் கை சுழலும் சக்கரதத்துடனும், மூன்றாம் கை ஏந்திய வாளுடனும், நான்காம் கை நீண்ட சூலத்தை மகிஷனின் முதுகில் பாதி குத்திய நிலையிலும் உக்கிரமாக இருக்கிறாள்.

இடது முதல் கை சங்கினை ஏந்தியும், இரண்டாம் கை வில்லினை பற்றியும், மூன்றாம் கை கேடயத்தை தாங்கியும், நான்காம் கை மகிஷாசுரனின் எருமைத் தலையை திருப்பி நாக்கை வெளியே இழுத்தபடி உள்ளது.

மகிஷாசுரன் பயந்தநிலையில் கோபத்துடன் தேவியை பார்த்தபடி, ஒரு கையில் கேடயத்தை பிடித்துக்கொண்டு, மறுகையில் கத்தியை ஊன்றி எழமுடியாமல் தவிக்கும் நிலையை அற்புதமாக வடித்திருக்கிறார் சிற்பி.

துர்கா தேவி தனது வலது காலை மகிஷன் மீது அழுத்தமாக ஊன்றி, இடது காலை அவனது தோளில் வைத்து அழுத்தி வைத்துள்ளாள். துர்க்கையின் வாகனமாகிய சிங்கமும் முன்னங்கால்களை தூக்கியபடி காட்சி தருகிறது. இந்த அற்புதப்படைப்பு 11-ம் நூற்றாண்டை சேர்ந்தது.

அம்மன் சன்னதி

இந்தக் கோயுலில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரிக்கு தனி சன்னதி உள்ளது. பார்வதி தேவியின் முக்கிய அவதாரங்களில் ஒன்று அகிலாண்டேஸ்வரி. இதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். அகிலம் என்றால் உலகம். ஈஸ்வரி என்றால் ஆள்பவள், காப்பவள் என்று பொருள்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த அம்மன் சன்னதியில் முன் மண்டபம், முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று அமைத்துள்ளது. அர்த்த மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் துவார பாலகிகள் நின்று காவல் புரிகின்றனர்.

மகா மண்டபத்தின் வாயிலில் இரண்டு தூண்களில் யாளி செதுக்கப்பட்டுள்ளன. வலது பக்க தூணில் யாளிக்கு மேலே சிவனும் கீழே விநாயகரும் அமர்ந்துள்ளனர். இடது பக்க தூணில் யாளிக்கு கீழே ஒரு பக்தை இருக்கரங்களை கூப்பி இறைவனை வழிபடுவது போலவும், யாளிக்கு மேலே முருகனும் காட்சியளிக்கின்றனர்.

முன் மண்டபத்தில் ஆறு தூண்கள் உள்ளன. இந்த தூண்களில் விஷ்ணுவின் அவதாரங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.

பலன்கள்

நீண்ட காலமாக திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தம்பதி சாமியாராக இங்கு வந்து வழிபட்டால் மழலைச் செல்வம் கிடைக்கும். ராகு, கேது தோஷம் நீங்க இங்கிருக்கும் சிவனையும் அம்பாளையும் தரிசித்தால் தோஷம் நீங்கும்.

பூஜைகள்

வழக்கமான பூஜைகள் தவிர, பிரதோஷம், அமாவாசை, தைப் பொங்கல், மகா சிவராத்திரி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தரிசன நேரம்

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

இருப்பிடம்

இந்தக் கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரம் வட்டத்தில் ஜம்பை என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. அருகிலிருக்கும் நகரம் திருக்கோயிலூர். திருக்கோயிலூருக்கு வடமேற்கில் 19 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலைக்கு கிழக்கே 25 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. தென்பெண்ணை நதியின் வட கரையில் இக்கோயில் உள்ளது.

சாலை வசதி

திருக்கோயிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் இந்த ஊர் அமைந்திருக்கிறது. திருக்கோயிலூருக்கும் திருவண்ணாமலைக்கும் தமிழகத்தின் பல பகுதியிகளில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. இந்த ஊர்களுக்கு வந்து அங்கிருந்து நகர் பேருந்து மூலமோ வாடகை கார் அல்லது ஆட்டோ மூலமோ ஜம்பையை அடையலாம்.

ரயில் வசதி

அருகிலுள்ள ரயில் நிலையம் திருக்கோயிலூர். இந்த ரயில் நிலையம் கோயிலில் இருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் ரயில் பாதையில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே நின்று செல்லும். விழுப்புரம் மார்க்கமாக செல்லும் மூன்று ரயில்களும், காட்பாடி மார்க்கமாக செல்லும் மூன்று ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன. இந்த ரயில்கள் எல்லாம் ஒரு நிமிடம் மட்டுமே திருக்கோயிலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் விழுப்புரம் சந்திப்பு.

விமான வசதி

அருகிலுள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி 103 கிமீ தொலைவில் உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு தினசரி விமானசேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. இதுபோக திருச்சிராப்பள்ளி விமான நிலையம் 177 கிமீ தொலைவிலும், சென்னை விமான நிலையம் 203 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன.

கோயிலின் முகவரி:

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், ஜம்பை, வாணாபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

தொலைபேசி:
மிரேஸ் குமார் - 7418175751