அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்

Dec 6, 2025 | Temple Story – Tamil

 

அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்,

திருநின்றியூர், மயிலாடுதுறை மாவட்டம்

திருநின்றியூரிலுள்ள இந்த ஆலயம் அனுஷ நட்சத்திரத்திற்கான பிரத்யேக ஆலயம். அனுஷம் நட்சத்திரங்களில் 17-வது நட்சத்திரமாக இருக்கிறது. இந்தக் கோயில் மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றியூர் என்ற சிற்றூரில் இருக்கிறது. இந்த கோயிலின் பெயர் மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயிலாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி சென்று வரவேண்டிய கோயில். அனுஷம் நட்சத்திரத தினத்தில் சென்று வழிபட வேண்டிய முக்கிய திருத்தலம். அவர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது மயிலாடுதுறையிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இது சோழ நாட்டிலுள்ள காவிரி வடகரையில் அமைந்துள்ள திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பதிகம் பாடியுள்ளார்கள்.

இறைவர் : மகாலட்சுமிபுரீஸ்வரர், லக்குமிபுரீஸ்வரர்

இறைவியார் : லோகநாயகி, உலகநாயகி

தல மரம் : விளாமரம்.

தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்.

அனுஷம் நட்சத்திரம்:

இதுவோர் ஆண் நட்சத்திரம். புலஸ்திய கோத்திரத்தை சேர்ந்தது. குடை போன்ற உருவம் கொண்டது. இதன் மொத்த நாழிகை 60. திசைகளில் கிழக்கு, மரங்களில் மகிழ மரம், மிருகங்களில் பெண் மான், பஞ்ச பூதங்களில் நெருப்பு, தேவ கணம், தாமச குணம் கொண்டு விளங்குகிறது.

நாட்களில் சமநோக்கு நாள், பஞ்ச பட்சி கோழி, நட்சத்திர வர பட்சிகளில் வானம்பாடி, தொடையில் ரச்சு, மத்திய நாடி, அரசகுலத்தில் மகேந்திர மண்டலத்தை சேர்ந்தது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். அதிதேவதை லட்சுமி.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவரும் தோற்றத்தில் இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். மனதில் பட்டத்தை பேசக்கூடிய நேர்மையாளர்கள். கடவுள் பக்தி கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவர்கள்.

கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதால் இவர்களின் நண்பர்கள் வட்டம் சிறியது. மிகச்சிறிய வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள். முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். பசி பொறுக்கமாட்டார்கள். ஜாதி, மதம், இனம் இவை எல்லாவற்றையும் கடந்து அனைவருடன் அன்பு பாராட்டுவார்கள்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் ஜமதக்னி என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவரது மனைவி ரேணுகா குளக்கரையில் நின்று கொண்டிருந்த போது வானில் பறந்து சென்ற ஒரு கந்தர்வனின் உருவம் தண்ணீரில் தெரிந்தது. கந்தர்வனின் அழகைக் கண்டு வியந்து போனாள்.

இதை பார்த்த ஜமதக்னி தனது மகனான பரசுராமனை அழைத்து தாயை கொல்லும் படி ஆணையிடுகிறார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப தாயை கொன்றுவிடுகிறார் பரசுராமர்.

பிறகு தனது தந்தையிடமே தாயை உயிர்ப்பித்து தரும்படி வரம் கேட்டு, தாயை உயிர்ப்பிக்கிறார். தாயை கொன்ற தோஷம் நீங்க வேண்டும் என்பதற்காக இந்த கோயிலுக்கு வந்து இங்குள்ள இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார்.

ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கிறுக்கும் சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார்.

பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார்.

அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் ஆகிய பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுகள் யாவும் பெற்றுள்ளனர்.

சோழ மன்னன் ஒருவன் தனது கர்ம வினைகள் நீங்க தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கும் உடையவன். அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இக்கோயில் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான்.

இப்படி இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது, அந்த தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து விடும். இந்தக் கோயில் எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் இரவு பூஜை முடிந்து பகலில் இந்த இடத்திற்கு வந்தபோது அடர்ந்த காட்டுக்குள் பாம்பு புற்றின் மீது பசு மாடு ஒன்று பால் சொரிவதை அனைவரும் பார்க்கின்றனர்.

அனுதினமும் நாம் இருட்டில் போகிறோம்., பகலில் இங்கு ஒரு தெய்வக்காட்சியாக இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறார்கள். அதன்பின் மன்னர் கட்டளைப்படி அந்த இடத்தை படைவீரர்கள் தூய்மை படுத்துகிறார்கள்.

அங்கிருக்கும் சிவலிங்கத்தை எடுக்க முயல்கிறார்கள். முடியவில்லை. மாலை நேரம் வருகிறது. மன்னன் இரவு பூஜைக்கு போக வேண்டுமே என்ற கோபத்தில் எல்லோரையும் திட்டி ஆக்ரோஷமாக பேசி, கடப்பாரையை எடுத்து புற்றின் மீது வீச, அங்கிருக்கும் சுவாமியின் சிரசின் மீது பட்டு ரத்தம் வரத்தொடங்கியது.

அதைக்கண்டு மன்னன் உட்பட அனைவரும் வருந்தி நிற்கும்போது, ஓர் அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் அனுஷம் நட்சத்திர தினத்தில் கோயில் எழுப்பி வழிபட்டார் என்பது தல வரலாறு.

அந்த ரத்தம் கோயிலின் மூன்று பக்கமும் அகழியாக உருவாகி ரோஜாப்பூ மாலையாக மாறுகிறது. காமதேனு ரூபத்தில் பால் ஆகாரம் கொடுத்து வந்த லட்சுமி தயார், இறைவனின் காயம்பட்ட இடத்தில் மாதுளை, தேன், சந்தனம், தாமரை பூ வைத்து பூஜிக்கிறார்.

இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் உள்ளன. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். லட்சுமி தேவி பூஜித்ததால் சுவாமியின் பெயர் லட்சுமிபுரீஸ்வரர் என்றானது.

தீப்பந்தம் திரி நின்றதால் இத்தலம் திரிநின்றஊர் என்று பெயர் பெற்று, தற்போது மருவி திருநின்றியூர் என்றானது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் மீது கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம்.

கோயில் அமைப்பு:

மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. இங்கு கொடி மரம் இல்லை. பலிபீடமும் நந்தியும் கொடிமரத்து விநாயகரும் இருக்கிறார்கள்.

வெளி பிரகாரத்தில் செல்வ கணபதி சன்னதியுள்ளது. அதற்கடுத்து கோயில் சுவரில் ஸ்ரீ நர்த்தன விநாயகரும், தட்ஷிணாமூர்த்தியும் உள்ளனர். ஆலயத்தின் பின்புறம் தனி சன்னதியில் அக்னி ஈஸ்வரர், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும், மகாவிஷ்ணு, பரசுராமர் வழிபட்ட பரசுராமலிங்கம், அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும், கணபதி, சுப்ரமணியர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் இருக்கிறார்கள்.

அதனையடுத்து மகாலட்சுமி சன்னதி தனியாக உள்ளது. கோயிலின் கருவறை பின் சுவரில் அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கிறார். வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமணியர் சன்னதியுள்ளது. அதற்கடுத்து நவக்கிரக சன்னதியுள்ளது.

நவகிரகங்கள் இங்கு சுயம்புவாக தோன்றியதாக சொல்லப்படுகிறது. அதனால் இங்கு அகம முறைப்படியோ பஞ்சாங்கப்படியோ நவக்கிரகங்கள் இருக்காது. அனைத்து கிரகங்களும் இடம் மாறி மாறி இருக்கும்.

நவகிரகங்களின் நடுவில் சூரிய பகவான் இருக்கிறார். அதற்கு எதிரே இருக்க வேண்டியது சுக்கிரன். ஆனால் இங்கு சந்திரன் இருக்கிறார். நவக்கிரகங்களில் சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. எனவே, அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

அதேபோல் சந்திரன் இருக்கவேண்டிய இடத்தில் அங்காரன் இருக்கிறார். அங்காரன் இருக்க வேண்டிய இடத்தில் புதன் இருக்கிறார். புதன் இருக்க வேண்டிய இடத்தில் ராகு இருக்கிறார். குருபகவான் இருக்க வேண்டிய இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். இப்படி கிரங்கங்கள் இங்கு மாறி மாறி இருக்கிறது.

அதற்கடுத்து பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியில் உள்ளன. கருவறை சுவரின் வலதுபுறம் பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சிறிய சன்னதியில் காட்சி தருகிறார்கள். பிரகார வலம் முடிந்து முக மண்டபத்தில் நுழைந்தால் துவார விநாயகரும் தண்டபாணியும் இருக்கிறார்கள்.

அவர்களை வணங்கி உள்ளே சென்றால் துவார பாலகர்கள் காப்பாளர்களாக இருக்கிறார்கள். அதற்கடுத்து உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதியும், வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்:

தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன. அதுபோக அனுஷம் நட்சத்திர தினத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, அனுஷம் நட்சத்திரத் தினத்தன்றோ பிறந்த நாளிலோ திருமண நாளிலோ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்றும் இந்த சிவனுக்கு சந்தனக்காப்பிட்டு, அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

பிரகாரத்தில் செல்வ விநாயகருக்கு சன்னதி உள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கடன் தொல்லை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தீர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை.

மேலும் ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் விஷேச பூஜைகளும் சிறப்பு அலங்காரங்களும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

இங்கு சுயம்புவாக தோன்றிய காலபைரவர் விசேஷமானவர். காசியில் மாலை நேரத்தில் கங்கா ஆர்த்தியின் போது அகோர பைரவரின் இடது கண் பார்வையும், சாமியின் இடது கண் பார்வையும் நேர் கங்கையை பார்த்த படி அகோர பைரவர்கள் சத்தம் எழுப்பும்.

தமிழில் இதை நாய்கள் ஊளையிடுதல் என்று சொல்வார்கள். அதுபோல் இங்கு மாலை 6.15 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது இங்கிருக்கும் பைரவர்கள், அந்த அகோர பைரவர் சத்தத்தை எழுப்புகிறார்கள். இந்த அகோர பைரவர் சத்தம் கேட்டாலே கர்ம வினைகள் விலகும் என்பது நம்பிக்கை.

கேரளாவில் வாழ்ந்த பரசுராமருக்கு தன் தாயை கொன்ற தோஷம் இங்கு நீங்கியதால் கேரளாவிலிருந்து 300 திருமேனிகள் வந்து அதனடிப்படையில் பூஜைகள் நடைபெறுகின்றன. காலையில் ஹோமங்கள் அபிஷேகங்கள் ஆகம விதிப்படி நடைபெறுகிறது. மாலையில் சயரட்சை பூஜை தாந்திரிக முறைப்படி நடைபெறுகிறது.

தரிசன நேரம்:

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை

இருப்பிடம்

இந்தக் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 270 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 266 கிமீ தொலைவிலும், கோயம்புத்தூரில் இருந்து 377 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள நகரங்கள் மயிலாடுதுறை 8 கிமீ, தஞ்சாவூர் 85 கிமீ தொலைவில் உள்ளது.

பேருந்து வசதி

சாலை வழியாக இந்தக் கோவிலை அடைவது வெகு சுலபம். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சீர்காழி செல்லும் நகர் பேருந்துகள் இந்த ஊர் வழியாக செல்கின்றன. சொந்த மற்றும் வாடகை கார்களில் வருபவர்களுக்கும் நல்ல சாலை வசதியுள்ளது. மயிலாடுதுறை இருந்து திருநின்றியூருக்கான பயண நேரம் 30 நிமிடங்கள்.

ரயில் வசதி

அருகிலுள்ள ரயில் நிலையம் மயிலாடுதுறை சந்திப்பு. இங்கிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை சந்திப்புக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ரயில்கள் வருகின்றன. அங்கிருந்து வாடகை கார் அல்லது ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம்.

விமான வசதி

அருகிலுள்ள விமான நிலையம் புதுச்சேரி விமான நிலையம் 110 கிமீ தொலைவிலுள்ளது. இங்கிருந்து பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதற்கடுத்து அருகிலிருக்கும் திருச்சிராப்பள்ளி. இது 143 கிமீ தொலைவிலுள்ளது. திருச்சி தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகள் என்று பல இடங்களுக்கும் விமான வசாதியுள்ளது. அதனால் விமானத்தில் வருபவர்களுக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையமே வசதியானதாக இருக்கும்.

முகவரி

அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்,

எஸ்.எஸ். நல்லூர் வழி,

திருநின்றியூர்,

சீர்காழி தாலுக்கா,

மயிலாடுதுறை மாவட்டம்.

தொலைபேசி:

ராஜேஷ் குருக்கள் (கேரள ஜோதிடர்) +91 90470 24457