கும்பகோணம் கீழக்கொருக்கை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

Jun 7, 2025 | Latest News - Tamil

கும்பகோணம் கீழக்கொருக்கை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், கீழக்கொருக்கையில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பவல்லி அம்பிகா உடனாகிய பிரம்மபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இக் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 27 ஆம் தேதி கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்குகிறது.

அவிட்ட நட்சத்திரத்தினர் வழிபடும் முதன்மை வழிபாட்டுத் தலமாக இத் திருக்கோயில் விளங்குகிறது.

திருக்குடந்தையின் மகாமக புண்ணிய தீர்த்தத்துக்கு தெற்கே 3 கி.மீ. தொலைவிலும் பட்டீஸ்வரத்துக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவிலும் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏப்ரல் 27 ஆம் தேதி அனுக்ஞை, வாஸ்து, கணபதி ஹோமம் முதலான பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி, ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏப்ரல் 30 ஆம் தேதி புதன்கிழமை காலை மூர்த்தி ஹோமம் முதலான பூஜைகளும், மாலையில் முதற்கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகின்றன. மே 1 ஆம் தேதி காலை, மாலையில் 2 ஆம் கால மற்றும் 3 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

இத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம், அதாவது மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் மே 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மாலையில் திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.

இந்த மகா கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கீழக்கொருக்கை, புதுச்சேரி, மேலக்கொருக்கை, பொற்கலக்குடி, அலமேலுமங்காபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், அறங்காவலர் குழுவினர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பிரம்மதேவனுக்கு ஞான உபதேசம்

ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று, சிவபெருமான் பிரம்மதேவனுக்கு ஞான உபதேசம் அருளிய தலம் இது. இந்த நாளில் இங்கு உபநயனம்- பிரம்ம உபதேசம் செய்வது (பூணூல் அணிவது) சிறப்பாகும்.

இக் கோயில் அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இக் கோயிலில் வழிபடுகின்றனர். கல்வியில் சிறக்க, திருமணத் தடை நீங்க, மூளை வளர்ச்சி, குடும்ப ஒற்றுமை சிறப்பதற்கு இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இக் கோயிலில் அடிப்பிரதட்சணம் செய்வது சிறப்பு.

இத் தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

முந்திரிப் பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி, இக் கோயில் வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

இத் திருக்கோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். மூன்றாம் குலோத்துங்க சோழனின் திருவுருவச் சிலையும், கல்வெட்டுகளும் இத் திருக்கோயிலில் காணப்படுகின்றன.