ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில்

Nov 26, 2025 | Temple Story – Tamil

ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், சந்திரன் கோயில்

திங்களூர்,தஞ்சாவூர் மாவட்டம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்களூர் என்ற சிற்றூரில் இந்த கோயில் அமைந்துள்ளது. நவக்கிரக தலங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது தலமாக சந்திரன் கோயில் உள்ளது. இது சந்திர தோஷ நிவர்த்தி ஸ்தலம். இத் தலத்தின் இறைவன் பெயர் கைலாசநாதர். சந்திரன் இங்கு சாப விமோசனம் பெற்றதால் இந்த தலத்தை சந்திரன் ஆலயம் என்று அழைக்கிறார்கள்.

இந்தக் கோயிலை வைத்தே இந்த ஊருக்கு திங்களூர் என்று பெயர் வந்திருக்கிறது. திங்கள் என்றால் சந்திரன் என்று பொருள். திங்களூர் என்றால் சந்திரன் குடியிருக்கும் ஊர் என்று அர்த்தம். தேவாரப் பாடல் ஒன்றில் இந்தக் கோயிலைப் பற்றி வருகிறது. ஆனால், தனியாக மூலவரைப் பற்றி எந்த பாடலும் இல்லாததால் இதனை பாடல் பெற்ற ஸ்தலம் என்று சொல்ல முடியாது.

இந்தக் கோயில் ‘அன்னப்பிரசனம்’ எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் சோறூட்டும் நிகழ்வு அதிகம் நடத்தப்படுகிறது. அன்னப்பிரசனத்திற்கு புகழ்பெற்ற தலமாக திங்களூர் விளங்குகிறது. வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை குழந்தைகளுக்கு ஊட்டுவதே அன்னப்பிரசனம். தமிழகத்தில் மிக சில கோயில்கள் மட்டுமே இந்த சிறப்பை பெற்றிருக்கிறது.

மூலவர்: கைலாசநாதர்

தாயார்: பெரியநாயகி

தல விருட்சம்: வில்வமரம்

தீர்த்தம்: சந்திரபுஷ்கரிணி

ஸ்தல வரலாறு

தேவர்களும் அசுரர்களும் ஓயாமல் சண்டைப் போட்டுக்கொண்டிருந்த காலம் அது. அந்த சண்டை பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து பருகுவதிலும் தொடர்ந்தது. பாற்கடலை கடைவதற்கு மந்தாரமாலையை மத்தாக பயன்படுத்தினார்கள். கயிறாக வாசுகி என்ற பாம்பை பயன்படுத்தினார்கள்.

பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும் வால் பகுதியை தேவர்களும் பிடித்துக் கொண்டார்கள். கயிறாக மாறிய வாசுகியை ஒரு பக்கம் அசுரர்களும் மறுபக்கம் தேவர்களும் இழுத்து இழுத்து கடைவதால் தாங்கமுடியாத அவஸ்தை உண்டானது. இதன் காரணமாக வாசுகியின் வாயில் இருந்து ஆலகால விஷம் வெளிவரத்தொடங்கியது.

பாற்கடலை கடைந்தவர்களுக்கு முதலில் கிடைத்தது கொடிய விஷம்தான். அந்த விஷத்தின் தீவிரம் வெப்பமாக மாறி தேவர்களையும் அசுரர்களையும் சுட்டுப் பொசுக்கத் தொடங்கியது. தேவர்களை பயம் தொற்றிக்கொண்டது. இந்த வெப்பம் நம்மை கொன்றுவிடும் என்ற முடிவுக்கு வந்தனர்.

எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டி தஞ்சம் அடைந்தார்கள். தஞ்சம் என்று வந்தவர்களை காக்கும் தெய்வமாக விளங்கும் சர்வ வல்லமை படைத்த சிவன், தேவர்களை காப்பாற்றுவதற்காக தனது சீடனான ஆலாலசுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை பெற்று வரச்சொல்லி அனுப்பிவைக்கிறார். அவர் கொண்டு வந்த விஷத்தை சிவன் வாங்கி பருகுகிறார். இந்த செயலால் தேவர்கள் மகிழ்ந்தாலும் வெப்பத்தின் தாக்குதலால் மயக்கமடைந்து விழுந்தார்கள்.

பாற்கடலை கடைந்த போது பலவகையான பொருட்கள் அதிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அப்படி வெளிவந்த பொருள்களில் ஒன்றுதான் சந்திரன். அந்த சந்திரன் தேவர்களின் மயக்கத்தை தனது அமிர்த கலைகளால் மாற்றி உடல் குளிர வைத்தான்.

சந்திரனின் நல்ல குணங்களைக் கண்ட தட்சன், அவனை தனது மருமகனாக ஆக்கிக்கொள்ள விரும்பினான். தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தான். தனது மகள்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என்று கூறினான். சந்திரனும் அப்படியே நடப்பதாக வாக்கு கொடுத்தான்.

வாக்களித்த சந்திரன் சொன்னபடி சொன்னபடி நடக்கவில்லை. ரோகிணி மற்றும் கார்த்திகை என்ற இரண்டு மனைவிகள் மீது மட்டும் மிகப் பிரியமாக காதலுடன் நடந்து கொண்டான். மற்ற மனைவிகளை அவன் கண்டுகொள்ளவில்லை. இதனால் மனம் வருந்திய மற்றவர்கள், நேராக தங்களது தந்தையான தட்சனிடம் சென்று முறையிட்டார்கள்.

சந்திரன் தனக்கு கொடுத்த வாக்கை மீறி தன் பெண்களிடம் பாரபட்சமாக நடந்து, அவர்களின் மனம் வருந்த செய்த சந்திரன் மீது கடும் கோபம் கொண்டான் தட்சன். சந்திரனின் கலைகள் பதினான்கும் தினம் ஒன்றாகத் தேய்ந்து போகும்படி சாபம் கொடுதான்.

தினம் ஒன்றாகக் கலைகளை இழந்த சந்திரன், பதறிப் போய், தட்சனிடமே இந்த சாபம் தீர வழி கேட்கிறான். சிவபெருமானை நோக்கி தவம் செய் என தட்சன் கூற, இந்தத் சந்திரன் தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி 48 நாட்கள் தவம் செய்கிறார் சந்திர பகவான்.

சந்திரன் முழுவதுமாக தனது பொலிவை எல்லாம் இழந்து நிற்கும் வேளையில் அவருக்குக் காட்சி தந்த சிவ பெருமான், தேய்ந்த நிலையில் பிறையாக இருந்த சந்திரனை தனது முடியில் சூடிக் கொண்டு, சந்திர மெளலீஸ்வரராக காட்சி தருகிறார்.

அதோடு, தட்சனின் சாபத்தை முழுவதுமாக நீக்க முடியாது என்றும், அதனால் அவரின் சாபத்தின்படி 15 நாட்கள் தேய்ந்தும், பிறகு தனது அருளால் 15 நாட்கள் வளரும் விதமாக வரமளித்தார் சிவன். சந்திரன் தவம் செய்து பலனடைந்த தலம் என்பதால் அவரின் பெயராலேயே இது திங்களூர் என்றாயிற்று.

அப்பூதி அடிகள்

63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலமிது. இவர் நாகப்பட்டினத்தில் இருக்கும் திருப்புகலூர் என்ற ஊரில் பிறந்தவர். இவர் வாழ்ந்த காலம் 8-ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் சோழ நாட்டில் சிவபக்தி அதிகமாக இருந்தது.

சிவனை விட சிவனடியார்களுக்கு தொண்டு செய்வது மிகுந்த பலனைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை கோலோச்சிய காலம். அப்பூதி அடிகளும் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதை தன் வாழ்நாள் பாக்கியமாக கருதி வாழ்ந்து வந்தார்.

பிறந்தது திருப்புகலூராக இருந்தாலும் அவர் வணிகம் செய்து வாழ்ந்த ஊர் திங்களூர். இவர் திருநாவுக்கரசர் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். அவரை தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டவர். தனது மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் என்றே பெயர் வைத்திருந்தார்.

இதனாலே மக்கள் இவருக்கு அப்பூதி என்று பெயர் வைத்தார்கள். அப்பூதி என்றால் ஒரே பெயரை மீண்டும் மீண்டும் பிள்ளைகளுக்கு வைப்பவர் என்று அர்த்தம். ஊரில் திருநாவுக்கரசரின் பெயரில் பல நல்ல காரியங்களை செய்து வந்தார். இந்த ஊரில் தண்ணீர் பந்தல் அவர் பெயரில் அமைத்து மக்களுக்கு சேவை செய்து வந்தார். அடியார்களின் பற்றே அவருடைய தனி அடையாளமாக மாறிவிட்டது.

ஒருமுறை திருநாவுக்கரசர் இந்த ஊருக்கு வர அப்பூதி அடிகள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். தன்னை முன்பின் பார்த்தறியாத அப்பூதி அடிகள் தனது பெயரில் அந்த ஊரில் பல சேவைகளை செய்து வருவதை பார்த்து ஆச்சரியப்பட்டார். தனது தீவிர சீடரான அப்பூதி அடிகள் வீட்டிற்கு உணவருந்த வருவதாக சொன்னார்.

இதைக் கேட்ட அப்பூதி அடிகள் தடபுடலாக பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார். தனது மகனிடம் தோட்டத்திற்கு சென்று வாழை இலைகளை கொண்டு வரச்சொன்னார். தோட்டத்திற்கு சென்ற மகனை ஒரு பாம்பு கடித்து விட, மகன் இறந்து விடுகிறான்.

தோட்டத்திற்கு சென்ற மகன் வெகு நேரமாகியும் வரவில்லையே என தோட்டத்திற்கு ஆட்களை அனுப்பிப் பார்க்கிறார். அங்கு மகன் இறந்த நிலையில் கிடக்கிறான். மகனின் உடலை மறைத்து வைக்கிறார்.

எந்த குறையும் இல்லாமல் குருவிற்கு மலர்ந்த முகத்துடன் விருந்து பரிமாறுகிறார். தனது ஞான திருஷ்டியால் மகன் இறந்ததை அறிந்து கொண்ட திருநாவுக்கரசர், அவனின் உடலை எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் செல்கிறார். சிவனிடம் பிரார்த்தனை செய்து அவரது உயிரை மீட்டெடுக்கிறார்.

அப்பூதி அடிகள், சிவபக்தியின் வரலாற்றில் ஒரு தனி இடத்தைப் பெறுகிறார். பக்தியின் உச்சம் என்பது இறைவனை வணங்குவதில் அல்ல; இறைவனடியாரைப் போற்றுவதில் தான் உள்ளது. சுயநலத்தைத் துறந்து, சேவையை முன்னிறுத்துவதே உண்மைப் பக்தியின் அடையாளம். அப்பூதி அடிகள் அடியார்பற்றின் உருவகமாகவும், விருந்தோம்பலின் சின்னமாகவும் சைவ மரபில் என்றும் நினைவுகூரப்படுகிறார்.

இந்த நிகழ்வை கவுரவிக்கும் விதமாக இந்தக் கோயிலில் திருநாவுக்கரசர், அப்பூதி அடிகள் குடும்பத்துடன் இருக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கோயில் அமைப்பு

இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது திராவிட கட்டக்கடக்கலையில் பிரகார அமைப்பில் கட்டப்பட்ட கோயிலாகும். மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது.

இந்த ஆலயத்திற்கு கிழக்கு, தெற்கு என்று இரண்டு திசைகளில் நுழைவாயில்கள் உள்ளன. பிரதான வாயிலாக தெற்கு திசை நுழைவாயில் ராஜகோபுரத்துடன் உள்ளது. எதிரே சந்திரபுஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் பாதங்களை நனைத்து தெற்கு கோபுரம் வழியே கோயிலினுள் நுழையலாம். நேரே கைலாசநாதர் சன்னதி உள்ளது.

கிழக்கு வாயில் வழியே உள்ளே வந்தால் பிரகாரத்தில் பரிவார சன்னதிகளாக முதலில் தூம கேது விநாயகர் இருக்கிறார். அடுத்து வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அதற்கடுத்து வடமேற்கு பகுதியில் கஜலட்சுமி சன்னதியும் உள்ளது.

கோயிலின் வடக்கு பக்கம் கருவறை சுவரை ஒட்டி துர்க்காதேவியும், சண்டிகேஸ்வரரும் இருக்கிறார்கள். கிழக்கு பிரகாரத்தில் பைரவர் சன்னதி உள்ளது. அதற்கடுத்து நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மற்ற கோயில்கள் போல் இல்லாமல் இங்கு 11 கிரகங்கள் உள்ளன. சூரியனின் இரண்டு மனைவிகளும் இங்கு இரண்டு கிரகங்களாக உள்ளனர்.

அதற்கடுத்து இந்த கோயிலின் ஷேத்திர பாலகரான சந்திரன் சன்னதி உள்ளது. சிறிய தனிக் கோயிலில் சந்திரன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சந்நதிக்கு முன்னால் அமர்ந்து வழிபட மண்டபம் இருக்கிறது.

கிழக்குப்புற வாயில் வழியாகக் கோயிலினுள் நுழைந்தால் இடதுபுறம் சூரியன் சந்நிதி உள்ளது. அடுத்து மடப்பள்ளியும், தீர்த்தக் கிணறும் உள்ளன. நேராக சென்றால் கைலாசநாதர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. இங்கு சந்திரன் உற்சவ மூர்த்தியாய் உள்ளார்.

பக்கத்திலே பெரியநாயகியம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. அம்மன் அக்ஷர மாலையை கையில் வைத்திருக்கிறார். இங்கிருக்கும் அம்மனுக்கு முன்னே சிம்ம வாகனத்திற்கு பதில் நந்தி வாகனம் இருக்கிறது.

சன்னதிக்கு வெளியே இடது பக்கம் அப்பூதியடிகள், அவரது மனைவி அருள்மொழி, மகன்கள் மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் திருவுருவங்கள் இருக்கின்றன. மூத்த மற்றும் இளைய திருநாவுக்கரசரை இங்கு மட்டுமே காணமுடியும். வலது பக்கம் திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவுருவ சிலையும் காணலாம்.

பலன்கள்

இது சந்திர தோஷ நிவர்த்தி ஸ்தலம். இந்தக் கோயிலுக்கு வருகை தந்தால் தீர்க்க ஆயுள் கிடைக்கும் என்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் மனதை ஆளும் கிரகமாக சந்திரன் சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் மனமும் வலுவாக இருக்கும்.

ராகு போன்ற கிரகங்களால் சந்திரன் பலவீனமடையும் போது, அது நிலையற்ற மனதையும், துக்கம், மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. அப்படிப்பட்டவர்கள் இங்கே சந்திரனுக்கு பூஜை செய்வதால் சிறந்த பரிகாரமாக அமையும்.

நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சி, மன வலிமை, சிந்தனையில் தெளிவு, மன ஆரோக்கியம், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் நீங்கும். மேலும் நரம்பு, மஞ்சள் காமாலை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் தீரும்.

தாய் மற்றும் மனைவியின் உடல்நிலை, வெளிநாட்டு பயணம், அரசாங்கத்திடமிருந்து உதவி, வாகன உரிமை ஆகிய அனைத்தும் சந்திரனின் கருணை இருந்தால்தான் கிடைக்கும். சந்திர தோஷம் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், குடும்ப சிக்கல்கள், செல்வ தடைகள் ஆகியவை நீங்கி, மன அமைதி, ஆனந்தம் மற்றும் செழிப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக பௌர்ணமி நாட்கள் மற்றும் திங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

சந்திர பகவானுக்குப் பிடித்தவை வெள்ளை நிற பொருட்கள் எனக் கூறப்படுகிறது. எனவே பக்தர்கள் இங்கு பால், வெள்ளை மலர்கள், சக்கரை, பச்சரிசி போன்றவற்றை சமர்ப்பிக்கிறார்கள். பால், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். தீபம் ஏற்றி, சந்திரனுக்கான மந்திரங்களைப் பாராயணம் செய்து சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.

இங்கு முக்கியப் பிரசாதமாக தயிர் சாதம் வழங்கப்படுகிறது. நிலாவின் குளிர்ச்சி, சாந்தம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் இந்தப் பிரசாதம் மன அமைதி தருவதாக நம்பப்படுகிறது. அதோடு, சர்க்கரை பொங்கல், தேங்காய் இனிப்புகள், பால் சார்ந்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

பூஜைகள்

தினசரி பூஜைகள் மற்றும் பௌர்ணமி, சந்திர தரிசனம் (அமாவாசைக்கு மறுநாள்), சோமவார பூஜை, மஹாசிவராத்திரி, நவகிரக தோஷ நிவாரண பூஜை, தைப்பூசம் (ஜனவரி – பிப்ரவரி), பங்குனி உத்திரம் (மார்ச் – ஏப்ரல்), ஆடி அமாவாசை (ஜூலை – ஆகஸ்ட்), கார்த்திகை தீபம் (நவம்பர் – டிசம்பர்), சந்திரகிரகண நாட்கள் ஆகியவற்றில் சிறப்பு அலங்காரங்களும் அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

தரிசன நேரம்

காலை 7 மணி – மதியம் 1 மணி

மாலை 4 மணி – இரவு 9 மணி

(சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் காலை 6 மணிக்கே கோயில் திறக்கப்படும்.)

இருப்பிடம்

திங்களூர் அருகில் இருக்கும் நகரம் திருவையாறு. 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தஜவுரில் இருந்து 16 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 36 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைப்பதால் அங்கிருந்து திருவையாறுக்கு நகர் பேருந்து மூலமோ வாடகை கார் மூலமோ வந்து சேரலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சாவூர் 16 கிமீ தொலைவு. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து ரயில் வசதியுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி. இங்கிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர் – 18 கி.மீ, அரண்மனை மற்றும் கலை அருங்காட்சியகம் – 18 கி.மீ, பெருவுடையார் கோவில் (பிரகதீஸ்வரர் கோவில்), தஞ்சாவூர் – 18 கி.மீ

கோயில் முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருவையாறு – 613 204

கோயில் தொடர்பு எண்: +91 4362-262499
கார்த்திகேயன் குருக்கள் +91 80981 72772