அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

Jun 6, 2025 | Temple Story – Tamil

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்

திருக்கோவலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

ஓர் ஊர் ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி ஓர் அருமையான ஊராக இருப்பது திருக்கோயிலூர். ஆத்திகர்களுக்கு இந்த ஊர் புண்ணிய ஸ்தலம், நாத்திகர்களுக்கு வரலாற்றுப் பெட்டகம், சைவர்களுக்கு இது வீரட்டானம், வைணவர்களுக்கோ இது திவ்யதேசம். ஆதியில் திருக்கோவலூர் என்று வழங்கப்பட்ட ஊர் தற்போது திருக்கோயிலூர் என்று அழைக்கப்படுகிறது. கோவலூர் என்றால் அரசுக் காவலர் குடியிருப்பு என்று அர்த்தம்.

திருவண்ணாமலையிலிருந்து 37 கிமீ தொலைவில் இந்த திருக்கோயிலூர் உள்ளது. அங்கு தென்பெண்ணை நதியின் தென் கரையில் கீழையூரில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 222வது தலம் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீராட்டத் தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததும், வரலாற்று சிறப்பு மிக்கதுமான அந்தகாசுரனை வதைத்ததலம். அட்ட வீரட்டானத்தில் இரண்டாவது தலம்.

கோவில் வீரட்டானம்

இறைவனை சாந்தஸ்வரூபனாகவும், கருணையுள்ளம் கொண்டவனாகவும், எல்லையற்ற அன்பு மிக்கவனாகவும்தான் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அனால் இறைவன் எல்லா காலங்களிலும் சாந்தஸ்வரூபனாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவன் நியாயத்தை நிர்வாகிக்க உக்கிர வடிவம் எடுத்தாக வேண்டியிருக்கிறது. அப்படி இறைவன் கோரத்தாண்டவம் ஆடி முடித்து, வீரம் விளைந்த இடங்கள் எட்டு.

இந்த எட்டு இடங்களைத்தான் சிவபிரானின் வீரஸ்தானங்கள் அல்லது வீரட்டானங்கள் என்று அழைக்கிறார்கள். சைவப் பெரியவர்கள் வரிசைப்படுத்திய அந்த திருத்தலங்களில் இரண்டாவது தலம், கோவல் வீரட்டானம் என்ற இந்த திருதலம்.

ஸ்தல வரலாறு

ஒருமுறை திருக்கைலாயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் தனித்திருந்த போது, தேவியானவள் இறைவன் கண்களை விளையாட்டாக மூடினாள். இதனால் உலகம் இருண்டது. அண்டம் முழுவதும் வெளிச்சமின்றி தவித்தது. தேவிக்கு இந்த விளையாட்டு ஒரு கணம் என்றால், உலகத்துக்கு அது ஓராயிரம் ஆண்டுகள்.

தேவிக்கு ஒரு கணமும், தேவர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகளுமாய் கழிந்த அந்த கொடுமையான இருண்ட காலத்தை அந்தகாரப் பொழுது என்கிறார்கள். இருள் சூழ்ந்த அச்சத்தில் தேவியின் கரங்களில் வியர்வை அரும்பியது. சிவனின் கண்ணில் இருந்து கடும் வெப்பம் தோன்றியது.

தேவியின் வியர்வைத் துளியுடன் பெருமானின் வெப்பமும் சேர்ந்து ஓர் உயிர் உண்டாயிற்று. அந்த இருளெல்லாம் திரண்டு ஓர் அரக்கனாக உருவெடுத்தது. அந்தகார காலத்தில் தோன்றியதால் அவன் அந்தகன் என்று அழைக்கப்பட்டான்.

பார்வதியால் வளர்க்கப்பட்டு வந்த அந்தகாசுரனை, குழந்தைவரம் வேண்டி கடுந்தவம் புரிந்துவந்த இரண்யாட்சனுக்கு மகனாக வாரிக் கொடுத்தார் சிவபிரான். கண் பார்வையில்லாமல் வளர்ந்த அந்தகனுக்கு தந்தையின் மரணத்திற்குப் பின் அரச பதவி கொடுக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபுவின் மகன்களே அரசனாக முடிசூட்டிக்கொண்டனர். இதனால் மனம் துன்புற்ற அந்தகன், பிரம்மாவை நோக்கி உக்ரமான தவம் புரிந்தான். அவனது கடும் தவத்தை மெச்சிய பிரம்ம தேவன் அவன் முன் தோன்றி வேண்டிய வரங்களை கேள் தருகிறேன் என்றார்.

தனக்கு மரணமில்லா வாழ்வு வேண்டுமென்று கேட்டான். பிரம்மன் அந்த வரத்தை தரமுடியாது என்று மறுக்கிறார். வேறு வரம் கேள் என்கிறார். உடனே அந்தகன், ‘நான், என்று பேரழகியும், தனக்கு தாயாக இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டு மோகிக்கிறேனோ அப்போதுதான் மரணம் ஏற்பட வேண்டும்’ என்ற வரத்தை பெற்றான்.

எந்த ஓர் உயிரும் தன் தாயைப் பார்க்கும் போது பாசம்தான் உண்டாகுமே தவிர மோகம் உண்டாகாது என்பதால் அந்த வரத்தினைக் கேட்டான். அவனது துரதிஷ்டம் அவனுக்கு பார்வதிதான் தன் தாயென்று தெரியாமல் போனதுதான்.

வரம் பெற்ற அந்தகன் மூன்று உலகங்களையும் கைப்பற்றினான். மனிதர்களைக் கொன்று குவித்தான். பெண்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை கடுமையாக தாக்கினான். இப்படியே 8 கோடி வருடங்கள் அவனது கொடிய ஆட்சி நிலவியது.

அந்த அந்தகனுக்கு அஞ்சி நடுங்கிய தேவர்கள் அனைவரும் திருமாலின் தலைமையில், பிரம்ம தேவன் முன்னிலையில் திருக்கோயிலூரில் ஒன்று திரண்டனர். தங்கள் குறைகளை பெருமானிடம் முறையிட்டனர். அந்தகாசுரனை வதம் செய்ய சிவபெருமான் முடிவு செய்தார்.

ஒரு பாழடைந்த குகையில் வயதான தோற்றத்துடன் சிவபெருமான் பார்வதி தேவியுடன் தவமிருந்தார். இந்த சேதி அந்தகனுக்கு தெரிந்தது. ஒரு வயதான முனிவருக்கு ஒர் அழகான இளம் பெண் சேவகம் புரிகிறாள் என்று.

மோகம் தலைக்கேறிய அந்தகன் தானே நேரில் சென்று முனிவரை கொன்று அந்தப் பெண்ணை கவர்ந்து வருவதாக கூறி புறப்பட்டான். சிவபெருமானை சந்தித்து போரிட்டான். அப்போது அந்தகனை தனது சூலத்தால் குத்தினார் பெருமான். அந்தகன் இறக்கவில்லை.

பதிலாக அந்தகன் சிவபெருமானின் தலையில் கதையால் அடித்தான். பெருமானின் சிரசில் இருந்து சிதறிய ரத்தம் எட்டு திக்கும் பைரவர்களை தோற்றுவித்தது. பெருமான் அந்தகனை திரிசூலத்தால் குத்தித் தூக்கிப்பிடித்து நடனம் ஆடினார்.

அந்தகனின் உடலில் இருந்து ரத்தம் பூமியில் விழுந்தது. ஒவ்வொரு துளி ரத்தத்திலும் பல அசுரர்கள் தோன்றினார். போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. பார்வதிதேவி காளிரூபம் எடுத்து அந்தகனின் ரத்தத் துளிகளை தரையில் விழாமல் கபாலத்தில் ஏந்தி தடுத்தாள்.

அந்தகனிடம் இருந்து பெருகி வந்த ரத்தம் ஈசனின் உடலை சிவப்பாக்கியது. அந்தகனை வதம் செய்ய சிவபெருமான் போராடினார். அதன் காரணமாக அவரது நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியது. அதிலிருந்து ஒரு தெய்வீக கன்னி தோன்றினாள். முகத்தில் இருந்து பூமியில் விழுந்த வியர்வைத் துளிகளில் இருந்து ஒரு தெய்வீக ஆண் வெளிப்பட்டான். அந்த இருவரும் அந்தகனின் காயத்திலிருந்து பெருகிய ரத்தத்தை பருகினார்கள்.

ஈசன் அந்தப் பெண்ணுக்கு சர்ச்சிகா என்று பெயரிட்டார். அவள் எட்டுக்கரங்களையும் மனித மண்டை ஓடுகளையும் மாலையாக அணிந்தவள். அவளது வலது நான்கு கரங்களில் வாள், கேடயம், சூலம், கட்டாரி இருந்தன. இடது நான்கு கரங்களில் துண்டிக்கப்பட்ட தலை, ரத்தக்கோப்பை, உடுக்கை, மீதமுள்ள ஒரு கையின் விரலை ரத்தக்கோப்பையிலுள்ள ரத்தத்தில் நனைத்தப்படி இருந்தாள்.

அந்த ஆணுக்கு மங்களன் என்று பெயர். அவர்தான் பிற்காலத்தில் செவ்வாய் கிரகமாக மாறியவர். அவரை வளர்த்தது பூமாதேவி. அங்காரன் எனும் பெயரில் செவ்வாய் தோஷங்களை நீக்கும் சக்தியுடைவர். அவரை யாரெல்லாம் வணங்குகிறார்களோ அவர்களது வேண்டுதல்களை நிறைவேற்றித்தரும் சக்தி கொண்டவர். திருமண தடையைப் போக்கி, திருமண யோகத்தை தருபவர். வீடு, மனை முதலான நில யோகங்களை தரும் வாஸ்து கடவுளாக விளங்குபவர்.

ஈசனின் தாக்குதலை தாங்க முடியாத அந்தகன் துடித்தான். கதறினான். சிவன், பார்வதியை தனது தாய் தந்தையாக ஏற்றான். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக காலங்கள் உள்ளவரை பெருமானுக்கு அடிமையாக இருப்பதாக சொன்னான்.

தன்னை சிவகணங்களுக்கு தலைவனாக பணிக்கும்படி மன்றாடினான். ஈசனின் கோபம் தணிந்தது. அவனது காயங்களை நீக்கி பிரிங்கி என்று பெயரிட்டு தம் கணங்களுக்கு தலைவனாக விளங்கும்படி அருள் செய்தார்.

அந்தகாசுரனை வதம்செய்ய ஈசன் எடுத்த ரூபமே பைரவர். அவனுடன் போர் புரியும் போது அந்தகன் தாக்கியதால் ஈசனின் சிரசில் இருந்து விழுந்த ரத்தம் எட்டு திசைகளிலும் தெறித்து விழுந்ததால் எட்டு பைரவர்கள் உற்பத்தியாகி, அவர்களிலிருந்து 64 பைரவர்கள், 64 பைரவிகள் உருவானதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே இது பிரதான பைரவர் தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் தனது வீரத்தை வெளிப்படுத்திய தலமானதினால் வீரட்டானமாயிற்று.

கோயில் அமைப்பு

சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயில். பெரும்பாலான இடங்கள் காலியாகவே உள்ளன. கோயில் வளாகத்தினுள் நுழையும் போது தென் திசை நோக்கி நம்மை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய அலங்கார நுழைவு வளைவு உள்ளது. இதனைக் கடந்து உள்ளே வந்தால் 16 கால் சிங்கமண்டபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயில் நிகழ்ச்சிகள் நடத்தவும், நெடுந்தொலைவிலிருந்து களைப்பாக வரும் பக்தர்கள் சற்று இளைப்பாறிக்கொள்ளவும் ஏற்றதாக இந்த மண்டபம் அமைகிறது.

மண்டபத்தின் வலதுபுறம் அம்பாள் கோயில் தனியாக உள்ளது. ஆரம்ப காலத்தில் அம்பாளும் சுவாமியும் ஒரே கோயிலாக இருந்ததாகவும், பிற்காலத்தில் தனிக்கோயிலாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அம்பாள் கோயிலைக் கடந்து சென்றால் வீரட்டானேஸ்வரர் ஆலய முகப்பில் ஆஸ்தான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் சமயப் பிரசங்கங்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

மண்டபத்தின் வலது புறத்தில் மூன்று நிலைகளைக் கொண்ட கோயிலின் ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தினுள் நுழைந்ததும் பொன்னிற கவசமிட்ட கொடிமரம் இறை உருவங்களுடன் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கொடிமரத்திற்கு முன்பாக பெரிய நந்தி காணப்படுகிறார். அவருக்கு நந்தி பலிபீடம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் எந்த சன்னதியும் அமைக்கப்படவில்லை. அதனால் நேராக கோயிலினுள் சென்றுவிட வேண்டியதுதான்.

அதற்கு முன் கோயில் வாயிலின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள சிற்பங்களை பார்த்துவிடலாம். வாயிலின் மேலே பஞ்சமூர்த்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் வந்தவுடன் முன்பக்க தூணின் இடதுபுறம் மெய்ப்பொருள் நாயனாரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

வலது பக்கம் ஒளவையாரின் வேண்டுதலைக் கேட்டு சுந்தரருக்கு முன்பாக கயிலையில் ஒளவையைத் துதிக்கையால் தூக்கிவிட்டு பெரியானைக் கணபதி சந்நிதி உள்ளது. இந்தக் கணபதி முன்தான் ஒளவை விநாயகர் அகவல் பாடினார். அந்தப் பாடலும் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சோமாஸ்கந்தர் சந்நிதியும், அதற்கடுத்து மஹாவிஷ்ணு சந்நிதியும் உள்ளது. அதற்கு எதிராக உள்ள தூணில் பழனியாண்டவர் காட்சித் தருகிறார்.

ஆலய வாயிலின் இடதுபக்கம் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக பெருமான் அற்புதமாக காட்சி தருகிறார். அதற்கடுத்து நடராஜர் சபை உள்ளது. மணிவாசகரும் சிவகாமியும் அருகிலேயே உள்ளனர். அடுத்து கஜலட்சுமி சந்நிதி உள்ளது. திருமுறை பேழையும், கபிலர் சிலையும் அடுத்தடுத்து உள்ளது.

கருவறை கிழக்கு மேற்கில் 48 அடியும், தெற்கு வடக்கில் 21 அடியும்கொண்டுள்ளது. இந்த ஆலயத்தின் சந்நிதி மேற்கு திசையில் அமைந்துள்ளது.

கருவறை வாயிலின் இருபக்கமும் துவாரபாலகர்கள் இருக்கிறார்கள். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் மூலவரின் தரிசனம் கிடைக்கிறது. சிவலிங்கத்திருமேனி சுயம்பு வடிவமாக தோன்றியுள்ளார். பெரிய உருவமாக இருக்கிறார்.

கோயிலுக்கான திருப்பணி செய்யும்போது லிங்கத்தை தோண்டிப்பார்த்தபோது அது 25 அடிக்கும் மேலாக கீழ்நோக்கிச் சென்று கொண்டே இருந்ததாம். அதனால் தோண்டும் வேலையை அப்படியே விட்டுவிட்டு, லிங்கத்தை சுற்றிலும் ஆவுடையாரை சேர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

நாக ஆபரணம் சார்த்தப்பட்டு மூலவர் மிக கம்பீரமாக அனைவருக்கும் அருள் வழங்கும் இறைவனாய் வீரட்டநாதனாய் காட்சியளிக்கிறார். மூலவரை வணங்கி உள்ளே சென்றால் பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவ திருமேனிகள் உள்ளன.

கோட்டத்தில் மூர்க்கமாகியுள்ள அஷ்டபுஜதுர்க்கை எட்டு கரங்களுடன் நின்ற நிலையில் காட்சிதருகிறார். அதற்கடுத்து பிரம்மா, தட்சிணாமூர்த்தி உள்ளனர். வலதுபக்கம் பைரவர் அருள்பாலிக்கின்றார். நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.

வரிசையாக சூரியலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாள், காளத்திநாதர், விஸ்வநாதர், விசாலாட்சி, சிதம்பரேஸ்வரர், அகத்தீசர், அர்த்தநாரீஸ்வரர், சூரியன், திருஞானசம்பந்தர், நரசிங்கமுனையரையர், மெய்ப்பொருள் நாயனார், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஜடாமுனி அய்யனார், வீரபத்திரர், சப்தமாதர்களின் உருவங்கள் குடைவரைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கருவறையின் வடக்கு பிரகாரத்தில் வெளிப்புறம் தள்ளியிருக்கும் அஷ்ட புஜ விஷ்ணு துர்க்கை அம்மன் சக்தியும் சிறப்பும் பெற்றவர். கருணை நிறைந்த கண்களோடு புன்னகை தவழும் முகத்துடன் அற்புதமாக காட்சிதருகிறார்.

இந்த அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்குகிறது. வேலை கிடைக்கிறது. வியாபாரத்தடை நீங்குகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ராகுகால பூஜை செய்கிறார்கள். எலுமிச்சம் பழவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயிலின் வெளி பிரகாரத்தில் அந்தகா சூரசம்கார மஹா பைரவர் சந்நிதி உள்ளது. சந்நிதியின் முகப்பின் மேல் பக்கத்தில் அஷ்ட பைரவர்கள் காட்சிதருகிறார்கள். அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பிஷண பைரவர், சம்ஹார பைரவர் என்று அஷ்ட பைரவர்களும் உள்ளனர்.

அஷ்டமி பைரவருக்கு ஏற்ற நாள். அதிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பானது. அந்நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லட்சுமிகளில் ஆசியும் கிடைக்கும்.

பைரவர்களை வழிபட்டால் பயம் நீங்கும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நமது அனைத்து துன்பங்களையும் நீக்கி இன்ப வாழ்வு தருவார்கள். கிரக தோஷங்களை விலக்கி வைப்பார்கள். நம் உடலில் ஏற்படும் வியாதிகளை கண்டறியவும், அதை குணமாக்கவும் வல்லவர்கள் பைரவர்கள்.

பலன்கள்

தேவர்களின் வினையையும் அந்தகனின் வினையையும் களைந்து அருள்செய்த காரணத்தால் இந்த தலமூர்த்தி வினையை வென்றார் என்ற பெயர் பெற்றார். அதனால்தான் திருஞானசம்பந்தர் ‘வினையை வென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்த்துமே’ என்று பாடினார்.

இந்த தலமூர்த்தியை வணங்கினால், ஆசையாகிய காமம், ஆசையால் வரும் பகையாகிய குரோதம், ஆசையால் உருவாகும் மோகம், ஆசை மிகுதியாக மாறி பேராசையாகும் லோபம், விடாப்பிடியான ஆசையாகிய திமிரான மதம், ஆசை பட்டத்தை அடைந்தே தீருவேன் என்ற மாட்சரியம், மேற்கண்ட செயல்களில் ஆட்பட்டு குழம்பி, பயந்து கடைசியில் தன்னிலை இழத்தல் போன்ற அனைத்து எதிர்மறையான குணங்களையும் நீக்கி வாழ்க்கைக்கு தேவையான நேர்மறையான எண்ணங்களை உண்டாக்கும் சக்தியைப் பெற்று வாழ்வில் சிறப்படைவார்கள். அதுமட்டுமல்லாது மரணபயத்தைப் போக்கும் மகாசக்தி கொண்ட பைரவர்தலம்.

எங்கே இருக்கிறது?

தமிழ் நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோயிலூர் என்ற ஊரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து 36 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 37 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களுக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதியும், ரயில் வசதியும் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் திருக்கோயிலூர். விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் ரயில் பாதையில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே நிற்கும். விரைவு ரயில்கள் நிற்காது. அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் விழுப்புரம் சந்திப்பு.

அருகிலுள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி 65 கிமீ தொலைவில் உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு தினசரி விமானசேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது.

 

திருக்கோயில் அலுவலகம்:

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்,

கீழையூர், திருக்கோவலூர் - 605 757,

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

அலைபேசி எண்: +91 74181 75751 (மிரேஸ் குமார் - அலுவலர்).