அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில்,
அரகண்டநல்லூர்
இறைவன் : அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர்
இறைவியார் : அருள்நாயகி, அழகிய பொன்னம்மை, சவுந்தர்ய கனகாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : பெண்ணையாறு
தேவாரப் பாடல்கள் : பீடினாற்பெரி யோர்களும், என்பினார்கனல் சூலத்தார்
பாடியோர் : சம்பந்தர், அப்பர்
இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் ஒப்பிலாமணி ஈஸ்வரர். அதாவது எவருக்கும் ஒப்பு இல்லாத இறைவன் இவர் என்று அர்த்தம். இந்த திருப்பெயரில் அருள்பாலிக்கும் ஒரே தெய்வம் இவர்தான் என்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பு.
இந்த ஆலயம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் அரகண்டநல்லூர் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு திருஅறையணி நல்லூர் என்ற தூய தமிழ் பெயரும் உள்ளது. அறை என்றால் பாறை, அணி என்றால் அணிந்து என்று பொருள். பாறை மீது அமைந்துள்ள ஈஸ்வரன் கோயிலை குறிக்கிறது.
இவ்வூரில் கிடைத்த கல்வெட்டுகளும் தேவாரப் பாடல்களும் இந்த ஊரை அறையணி நல்லூர் என்றே அழைக்கின்றன. விஜயநகர பேரரசின் கல்வெட்டு அறைக்கண்ட நல்லூர் என்று கூறுகிறது. அதுவே காலப்போக்கில் அரகண்டநல்லூர் என்றானது.
இந்த ஊரில் 17.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அழகான பாறை மீது அமைந்துள்ளது ஒப்பிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் இறைவன் அதுல்ய நாதேஸ்வரர், ஒப்பிலாமணி ஈஸ்வரர், ஒப்பொருவருமில்லாத நாயனார், அறையணி நாதர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இறைவியின் பெயர் சவுந்தர்ய கனகாம்பிகை, அழகிய பொன்னம்மை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். தீர்த்தம் தென்பெண்ணை நதிநீர்.
தேவாரப் பாடல் பெற்ற நாட்டுக்கோயில்களில் பனிரெண்டாவது கோயில் இது. மகாபலியை தண்டித்த பாவம் நீங்கவும், பிரிந்திருந்த அன்னை மகாலட்சுமியுடன் இணைந்த மஹாவிஷ்ணு இந்த இறைவனை வேண்டி தவம் இருந்தார். ஈசன் இருவருக்கும் அருள் செய்தார்.
பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு வந்து தங்கி இருந்து இந்த இறைவனின் அருளைப் பெற்றனர். ஸ்ரீ ரமண மகரிஷிக்கு திருவண்ணாமலை ஈசன் காட்சியளித்ததும் இங்குதான்.
நீண்டகாலமாக அடைபட்டிருந்த இந்தக் கோயிலின் கருவறையை பதிகம் பாடித்திறந்து ஒளிபெற செய்தார் திருஞானசம்பந்தர் . இந்த கோயிலில் இருந்தபடியே திருவண்ணாமலையை நோக்கி திருவண்ணாமலை பதிகமும் பாடினார்.
ஸ்தல வரலாறு
திருக்கோவிலூரில் எழுந்தருளியிருக்கும் திருவிக்கிரமன், மிகுந்த ஆணவத்தோடு இருந்து வந்த மகாபலியை தண்டிக்க நினைத்தார். அதன்படி வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்திஇடம் மூன்றடி நிலம் கேட்டு, அவனின் ஆணவத்தை அழிப்பதற்காக தண்டித்தார்.
மகாபலியை தண்டித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபெருமானை வேண்டினார். அவரோ பூலோகத்தில் தன்னை வழிபட்டு வர தோஷம் நீங்கும் என்றார். அதன்படியே பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான்.
இந்த தலத்து ஒப்பிலா மணிஸ்வரரை வழிபட்டபோது, சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து பாவதோஷத்திலிருந்து விடுபட வைத்தார். மகாவிஷ்ணு தாயாரைப் பிரிந்து தனியே இங்கு வந்ததால், ஸ்ரீதேவி தாயாரும் மகாவிஷ்னுவை காண இந்த தலத்திற்கு வந்தார். இருவரும் சேர்ந்து ஈசனை வழிபட்டார்கள் என்பது ஸ்தல வரலாறு.
மற்றொரு புராண வரலாறும் இங்கு இருக்கிறது. நீலகண்ட முனிவர் தான் பெட்ரா சாபம் நீங்கவேண்டும் என்பதற்காக பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அப்படி ஒருநாள் திருவண்ணாமலை சென்று அங்கிருக்கும் அண்ணாமலையாரை வழிபடுவதற்காக இந்த ஊர் வழியாக சென்றார்.
அப்போது இங்கிருக்கும் தென்பெண்ணை நதியில் நீராடிவிட்டு ஆற்றின் நடுவே இருந்த அகலமான பாறையின் மீது அமர்ந்து நீண்ட காலம் தவமிருந்தார். அந்த தவத்தில் மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவியுடன் காட்சியளித்து அவருக்கு சாபவிமோசனம் அருளினார்.
நீலகண்ட முனிவர் சிவபெருமானிடம் இந்த இடத்தில் தனக்கு அருளியது போலவே, தாங்கள் இங்கிருந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என வேண்டினார். இறைவன் அவரின் வேண்டுகோளை ஏற்று சுயம்புலிங்கமாக தோன்றி அருள்புரிந்தார் என்கிறது புராணம். நீலகண்ட முனிவர் வணங்கிய பாறையை நீலகண்டர் பாறை என்று மக்கள் அழைக்கிறார்கள்.
கோயில் வடிவமைப்பு
இக்கோயில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. கோயில் கோபுரங்களையும், மண்டபங்களையும் பாண்டியர்கள், விஜயநகர பேரரசு மன்னர்கள் காட்டியுள்ளார்கள். கருவறையின் விமானம், செங்கற்களாலும் சுதைச்சிற்பங்களாலும் கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் ராஜகோபுரம் தென்பெண்ணையாற்றின் வடகரையிலுள்ள மிகப்பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. ஏழுநிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரம் தெற்கு திசைப் பார்த்த வண்ணம் உள்ளது. அழகிய ராஜகோபுரம் வானளாவ உயர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் கருணைக்கடலாக அமர்ந்துள்ளார். இவரே இந்த கோயிலின் தல விநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் திருஞானசம்பந்தர் திருமேனி உள்ளது. விநாயகரின் பக்கத்தில் விசுவநாத லிங்கம் உள்ளது.
முதல் பிரகாரத்தில் கருவறைக்கு மேற்கு பக்கம் பலிபீடம் அமைந்துள்ளது. இந்த பலிபீட மேடையில்தான் கோயில் இறைவனுக்கு திருப்படையல் செய்வது வழக்கம். பலிபீடத்தின் அருகில் கோயில் கொடிமரம் அமைந்துள்ளது.
அடுத்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் கருவறையை அடையலாம். கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவரைமண்டபம் நீள்சதுர வடிவில் நான்கு மையத்தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்கு பக்கத்தில் நடராஜர் நர்த்தனம் புரிகிறார். துவாரபாலகர்கள் வாயின் இருபக்கமும் இறைவனை காத்து நிற்கின்றனர்.
கருவறைச் சுற்றில் நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சோழர் காலத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி தெற்கு மாதத்திலும், லிங்கோத் பவர் கிழக்கு மாதத்திலும், பிரம்மா வடக்கு மாதத்திலும் இருந்து அருள் பாலிக்கின்றனர்.
சப்தமாதாக்கள் வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும் உள்ளது. வெளிச் சுற்றில் ஓர் அர்த்த மண்டபமும் கருவறையும் சேர்ந்த சிறிய அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதி இருதள விமானத்துடன் கம்பீரமாக காட்சிதருகிறது.
அம்பாள் தனிக்கோயிலில் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். அன்னை கருணை கொண்ட கண்களுடன், எளிய வடிவில் எழிலாகக் காட்சி தருகிறார்.
இத்தலத்திலுள்ள முருகன் ஒருமுகத்துடனும், ஆறு திருக் கரங்களுடனும் வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கைகளில் ஆயுதங்கள் உள்ளன.
கோயிலுக்கு வெளியே ராஜகோபுரத்திற்கு மேற்கு பக்கம் பாறைகளுக்கு இடையே பீமன் குளம் என்ற ஒன்றுள்ளது. பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக சொல்லப்படுகிறது. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரை கோயில்கள் போல் ஐந்து அறைகள் உள்ளன.
பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுகிறார்கள். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம்.
பலன்கள்
பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோலவே, இந்த இறைவனை வழிபட்டால் ஆட்சியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆபத்துக்கள் நீங்கும். பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள் என்பதை திருஞான சம்பந்தர் பதிவு செய்துள்ளார்.
தேவாரம்:
என்பினார்கனல் சூலத்தார் இலங்கு மாமதி உச்சியான்
பின்பினாற் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி யென்று
முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் முர்த்தி தன் தாள்களுக்கு
அன்பினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழுவர்களே
திருவிழாக்கள்
இந்த ஆலயத்தில் வைகாசித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் இந்தக் கோயிலின் மண்டபம் காட்டும் போது தொடர்ந்து இடிந்து விழுந்து கொண்டே இருந்தது. இதைக்கண்டு வேதனை அடைந்த இளவெண்மதி சூடினான் என்ற இளைஞன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு விழாமல் இருந்தால் நவகண்டம் என்ற தலைப்பலி அளிப்பதாக வேண்டிக்கொண்டான்.
மண்டபமும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அவனது வேண்டுதல்படி நவகண்டம் அளித்து ஊரார் முன்னிலையில் வைகாசி விழா நாளில் உயிர் துறந்தான். இன்றும் மக்கள் அவனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அதனாலே இங்கு வைகாசித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இதுபோக ஆனித் திருமஞ்சனம், ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை வெகுசிறப்பாக கொடாடப்படுகிறது.
ஐப்பசி மாதமும் இங்கு ஏகப்பட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி பவுர்ணமி, மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்து ஊர் இது என்பதால் இங்கு ஐப்பசி சதயம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, தீபாவளி திருநாள், கந்தசஷ்டி, ஐப்பசி கடைமுகம், ஐப்பசி திருநாள் என்று வரிசையாக விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பூஜைகள்
தினசரி காலை, மதியம், மாலை, இரவு என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வைகாசி மாதத்தில் பிரமோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், பவுர்ணமி, அம்மாவாசை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடத்தப்படுகின்றன.
தரிசன நேரம்:
காலை 7.00 – 11.00 மாலை 4.00 – 7.00
இருப்பிடம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் திருக்கோயிலூர் என்ற நகரத்தில் இருந்து 2 கிமீ தொலைவிலுள்ள அரகண்டநல்லூர் என்ற சிற்றூரில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இது விழுப்புரத்தில் இருந்து 37 கிமீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 35 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருக்கோயிலூர் சிவன் கோயில் எதிர்புறத்தில் தென்பெண்ணை நதியின் மறு கரையில் இக்கோயில் உள்ளது.
அதுல்ய நாதேஸ்வரர் இருப்பிடம்
Google Route Map : https://maps.app.goo.gl/PdT5sFvXhN3m2PjE7
சாலை வசதி:
கடலூர் – வேலூர் மாநில நெடுஞ்சாலையில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 15 நிமிட இடைவேளைகளில் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த இரண்டு நகரங்களுக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரகண்டநல்லூருக்கு நகர் பேருந்து வசதியும் இருக்கிறது. பேருந்து கட்டணம் ரூ.7 – 10. வாடகை ஆட்டோ மற்றும் கார்களில் வந்து சேரலாம். கட்டணம் ரூ.50 முதல் 100 வரை.
ரயில் வசதி:
அருகிலுள்ள ரயில் நிலையம் திருக்கோயிலூர். இந்த ரயில் நிலையம் கோயிலில் இருந்து மிக மிக அருகில் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் ரயில் பாதையில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே நின்று செல்லும். விழுப்புரம் மார்க்கமாக செல்லும் மூன்று ரயில்களும், காட்பாடி மார்க்கமாக செல்லும் மூன்று ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன. இந்த ரயில்கள் எல்லாம் ஒரு நிமிடம் மட்டுமே திருக்கோயிலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் விழுப்புரம் சந்திப்பு.
விழுப்புரம் (33.6 கிமீ, பயண நேரம் 30 நிமிடம்) செல்ல
66025 காட்பாடி – விழுப்புரம் பாசஞ்சர் ரயில் காலை 7.47 (பயண நேரம் 29 நிமிடம்)
66027 காட்பாடி – விழுப்புரம் பாசஞ்சர் ரயில் காலை 9.22
16853 திருப்பதி – விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மாலை 7.09
திருவண்ணாமலை (33.9 கிமீ, பயண நேரம் 40 நிமிடம்) மற்றும் காட்பாடிக்கு (127 கிமீ, பயண நேரம் 3 மணி 30 நிமிடம்) செல்ல
16854 விழுப்புரம் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காலை 6.09
16870 விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் மாலை 6.00
66026 விழுப்புரம் – காட்பாடி பாசஞ்சர் மாலை 7.50
விமான வசதி
அருகிலுள்ள விமானநிலையம் பாண்டிச்சேரி 65 கிமீ தொலைவில் உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு தினசரி விமானசேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. இதுபோக திருச்சிராப்பள்ளி விமான நிலையம் 163 கிமீ தொலைவிலும், சென்னை விமான நிலையம் 177 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன.
கோயிலின் முகவரி:
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அரகண்டநல்லூர் அஞ்சல், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 605752.
தொலைபேசி:
மிரேஸ் குமார் - 7418175751