
அருள்மிகு நாடியம்மன் கோயில்
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
பொதுவாக ஒரு கோயில் என்று எடுத்துக்கொண்டால் அங்கு மூலவர் உற்சவர் என்ற இரண்டு மூர்த்திகள் இருப்பார்கள். இதில் மூலவர் கருவறையில் வீற்றிருக்கும் பிரதான தெய்வம். இவர் நிரந்தரமாக ஒரே இடத்தில் இருப்பவர். உற்சவர் மூலவரின் ஓர் அம்சம். திருவிழாக்களில் ஊர்வலமாக வீதிகளில் எடுத்துச் சொல்லப்படுபவர். விழாக்காலங்களில் பூஜைகளும் வழிபாடுகளும் விமர்சையாக இவருக்கு நடத்தப்படும்.
அதேபோல் ஒரு கோயிலின் உற்சவர் அந்தக் கோயிலில் மட்டுமே வீற்றிருப்பார். இதுதான் இவ்வளவு காலம் நாம் அறிந்த ஆன்மிகம். ஆனால், ஒரு கோயிலின் உற்சவர் கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பதும், திருவிழாவின் போது வேறொரு மண்டபத்தில் இருந்து அருள்பாலிப்பதும் நாம் கேள்விப்பட்டிராத ஓர் அபூர்வ நிகழ்வு.
இப்படி ஓர் அபூர்வம் நிகழ்ந்து கொண்டிருப்பது பட்டுக்கோட்டையில். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகருக்கு வெளியே இருக்கும் நாடியம்மன் புரத்தில் இருக்கும் நாடியம்மன் திருக்கோயிலில்தான் இத்தகைய அதிசயம் நடந்து வருகிறது.
கோயில் திருவிழாவின்போது உற்சவர் விக்ரகம் இடம்பெயர்ந்து ஊருக்கு நடுவே ஒரு மண்டபத்தில் 12 நாட்கள் வைக்கப்பட்டு அங்குதான் அனைத்து பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல இந்த கோயிலின் உற்சவர் வேறொரு கோயிலில் வைக்கப்பட்டு விழாக்காலங்களில் மட்டும் வெளியே எடுத்து வரப்படுகிறது. பங்குனி பெருவிழாவின் போது இந்த நிகழ்வு நடக்கிறது.
தல வரலாறு
நாடியம்மன் கோயில் உருவானதற்கு இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு கதையின் படி 400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் உருவானதாக தெரிகிறது.
அப்போது இந்த பகுதி முழுவதும் காடுகள் நிறைந்திருந்தது. இன்றைக்கு கோயில் இருக்கும் இடத்தில் ஒரு வேப்பமரம் இருந்தது. அதனடியில் கல்லால் சுயம்புவாக வளர்ந்த ஓர் அம்மன் இருந்தாள்.
அந்த சமயத்தில் தஞ்சையை ஆண்ட மன்னரின் குதிரைப்படைகள் அந்த பகுதிக்கு வந்தன. நீண்ட பயணம் செய்து வந்ததால் வீரர்களும் குதிரைகளும் களைத்துப்போய் இருந்தன. வீரர்கள் மட்டுமல்ல குதிரைகளுக்கும் கடுமையான தாகம் ஏற்பட்டது.
அப்போது அந்த வேப்பமரத்தடியில் சுயம்புவாக இருந்த அம்மன் மீது ஒரு குதிரையின் கால் எதேச்சையாக பட்டுவிட்டது. அடுத்த நொடியே, அந்தக் கல்லிலிருந்து பால் பெருக்கெடுத்தது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த வீரர்கள். அந்தப் பாலை குடித்து தங்கள் தாகத்தை மட்டுமல்லாமல் குதிரைகளின் தாகத்தையும் தணித்தார்கள்.
இந்த அதிசய நிகழ்வை உடனே மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னரின் அந்த இடத்திற்கு வந்து சுயம்புவாக இருந்த அம்மனை வணங்கினார். அப்போது அசரீரியாக அம்மன் குரல் கேட்டது. “நானே இந்த ஊரின் காவல் தெய்வம்; என்னை நாடி வருவோர்க்கு நலன் அருளும் நாடியம்மன் நான். இங்கு எனக்கு ஒரு கோயில் எழுப்புங்கள்” என்றது.
அந்த இடத்தில் சிறியதாக கோயில் ஒன்றை கட்டி, அந்தக் கோயிலில் அம்மனை பிரதிஷடை செய்து நாடியம்மன் என்று பெயரிட்டு வழிபட தொடங்கினர். அன்று முதல் பட்டுக்கோட்டை மக்களின் மனம் கவர்ந்த தெய்வமாக நாடியம்மன் மாறினார் என்பது செவிவழிச் செய்தி.
மற்றொரு கதையின்படி தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது மான் ஒன்று அவர்கள் பிடியில் சிக்காமல் ஓடிக்கொண்டேயிருந்தது. இறுதியாக ஒரு புதருக்குள் சென்று ஒளிந்துக் கொண்டது.
அந்த புதருக்குள் மான் இருக்கிறதா என்று மன்னர் தேடிப்பார்க்கச் சொன்னார். வீரர்கள் அங்கு சென்று தேடியபோது மானுக்கு பதிலாக ஒர் அழகிய பிடாரியம்மன் சிலை இருந்தது. வீரர்களின் வாள் தெரியாமல் அந்த சிலைமீது பட்டதால் அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்துகொண்டிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மன்னன் அந்த சிலையை வெளியே எடுத்து வந்து சுத்தம் செய்து, பட்டுக்கோட்டையின் கோட்டைப் பகுதியில் இருந்த சிவன் கோயில் பூசாரிகளை அழைத்து பிடாரியம்மனுக்கு அது கிடைத்த இடத்திலேயே ஓர் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார்.
சிலை கிடைத்த இடத்தில் கோயில் உருவானது. அவ்வளவு காலம் காட்டில் இருந்த அம்மனுக்கு நித்தியப்படி பூஜைகளும் விழாக்களும் நடத்தப்பட்டது. இந்த ஆலயத்தை கட்டி நிர்வாகிக்கும் பொறுப்பை அந்த ஊரில் இருந்த சின்னான் என்ற தனவந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கு கருங்கல் விக்ரகத்தை பிரதிஷடை செய்து வழிபட்டு வந்தனர். அதன்பின் அந்த அம்மனுக்கு அவர் ஐம்பொன் சிலை ஒன்றை வடிவமைத்து வழிபாடு செய்யலானார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அனைத்தையும் தருவதால் இந்த அம்மனுக்கு நாடியம்மன் என்று பெயர் வந்தது.
சில காலம் கழித்து வடக்கிலிருந்து முகலாய படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போது நிறைய சிவாலயங்களும் பெருமாள் கோயில்களும் அழிக்கப்பட்டன. இதை கேள்விப்பட்டு, நாடியம்மனின் உற்சவ விக்ரகம் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு பக்தர்கள் மாற்றினார்கள்.
தஞ்சையில் மராட்டிய மன்னரின் ஆட்சி ஏற்பட்ட போது சேதப்படுத்தப்பட்ட கோயில்கள் எல்லாம் திருப்பணி செய்து மீண்டும் திறக்கப்பட்டன. அப்போது பட்டுக்கோட்டையில் பெரிய கடை தெருவில் இருக்கும் ஒரு கிணற்றில் இருந்து நாடியம்மன் உற்சவ விக்ரம் கண்டெடுக்கப்பட்டது.
அதன் காரணமாக அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட இந்த பகுதியில் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. பங்குனி திருவிழாவின் போது உற்சவர் விக்ரம் இங்கு எடுத்துவரப்படுகிறது. கொண்டாட்டங்கள் நடத்தப்படும் வழக்கம் தோன்றியது.
அதுமட்டுமல்ல இந்த அம்மன் விக்ரகம் பாதுக்காக்கும் நோக்கத்தில் காவல் நிறைந்த கோட்டை சிவன் கோயிலில் இதை பத்திரப்படுத்தும் பழக்கமும் ஏற்பட்டது என்று ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.
கோயில் அமைப்பு
இந்தக் கோயில் ஒரு சிறிய கற்கோயில். கோயிலுக்கு வெளியே கோயிலை பாதுகாக்கும் நோக்கில் மூன்று குதிரை சிலைகள் சுதைச் சிற்பங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் கோயிலுக்கு எதிரே உள்ள குதிரை சிவப்பு நிறத்திலும், பக்கவாட்டிலுள்ள குதிரைகள் வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன.
கோயில் நுழைவாயிலுக்கு முன்பாக சிம்ம வாகனம் அம்மனை பார்த்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறது. அதற்கடுத்து திரிசூலமும் ஐந்தடி உயர 9 வரிசை சரவிளக்கும் இருக்கிறது. நுழைவாயிலின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய பூதத்தையா சிலைகள் உள்ளன. கோயிலையும் இங்கு வரும் பக்தர்களையும் காப்பதுதான் இவர்கள் வேலை. இவர்களுக்கு அருகே தூவார சக்தி, பாவை விளக்கு சிலைகள் உள்ளன.
கோயில் மதில் சுவர்களுக்கு மத்தியில் இருக்கும் நுழைவாயிலில் ஒரு சிறிய கோபுரம் நம்மை வரவேற்கிறது. அந்த நுழைவாயிலில் நுழைந்து உள்ளே சென்றால் சிம்ம வாகனத்திற்கு எதிரே அம்மன் சன்னதி அமைந்துள்ளது. சன்னதியின் மேல்புறமுள்ள முகப்பின் நடுவே ராஜராஜேஸ்வரி சுதைச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. முகப்பின் இருபுறங்களிலும் சிங்கங்கள் அமர்ந்துள்ளன.
கருவறையில் கருணை முகத்துடன் நாடியம்மன் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். மேலிருக்கும் இரண்டு கரங்களில் ஆயுதங்களும், கீழ் கரங்களில் அபய முத்திரையும், இடது காலை மடித்தும், வலது காலை தொங்கவிட்டும் அமர்ந்திருக்கும் அம்மனின் தோளில் சூலாயுதம் சார்த்தப்பட்டிருக்கிறது.
இந்தக் கோயிலில் மூன்று கோபுரங்கள் உள்ளன. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம். ஏழு கலசங்கள் கொண்ட இந்த கோபுரத்திற்கு ஆனந்த கோபுரம் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. இதுபோக கருவறையின் மீது அமைக்கப்பட்ட மூன்று நிலை கொண்ட வட்ட கோபுரம். ஒரு நிலை கொண்ட உப சன்னதி வட்ட கோபுரமும் இங்குள்ளது.
கோயில் பிரகாரத்தில் நாகநாதர் சன்னதி, இரட்டை விநாயகர் சன்னதிகள் சிறிய வடிவில் அமைந்துள்ளன. கோயிலின் ஸ்தல விருட்சமாக நாகலிங்க மரம் உள்ளது. பொதுவாக ஊருக்கு வெளியே இருக்கும் அம்மன் கோயில்களில் நாகலிங்க மரம் வளர்ப்பார்கள்.
இதன் பழங்கள் கனிந்து தரையில் விழுந்து பெரும் சத்தத்துடன் வெடிக்கும். கோயில் கொள்ளையர்களிடம் இந்த சத்தம் அச்சத்தை ஏற்படுத்தும். கொள்ளையர்களிடம் இருந்து கோயிலை பாதுகாக்க இந்த சத்தம் உதவுவதால் கோயில்களில் இந்த மரம் வளர்க்கப்படுகிறது.
இதன் பூ மலர்ந்தும் அது ஒரு நாகலிங்கம் போல் தோற்றமளிக்கும். அதனாலே இந்த மரத்திற்கு நாகலிங்க மரம் என்று பெயர் வந்தது.
திருவிழாக்கள்
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனிப் பெருவிழா இங்கு மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவுக்கான காப்பு கட்டப்பட்டதும் பட்டுக்கோட்டை மக்கள் பாயில் படுக்க மாட்டார்கள். நகரில் எங்கும் செக்கு ஆட்ட மாட்டார்கள். உலக்கை சத்தம் கேட்காது. அந்தளவிற்கு நாடியம்மன் மீது மிகுந்த பயபக்தி கொண்டிருக்கிறார்கள்.
திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்மனை வழிபடுவார்கள். இது தவிர, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும், நவராத்திரி நாட்களிலும் சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இங்கு மண்பானை பொங்கல் வைப்பது சிறப்பான ஒன்றாக இருக்கிறது. கோயில் வளாகத்திலேயே புதிய மண்பானையில் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைப்பது வழக்கமாக உள்ளது. இதனால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.
பூஜைகள்
தினந்தோறும் உச்சிக்கால பூஜை, காலசந்தி பூஜை, மாலை பூஜை நடைபெறுகிறது. விழாக்காலங்களில் சிறப்பு பூஜைகளும் அலங்கார ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
இருப்பிடம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகரத்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் நாடியம்மன் கோயில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை நகரம் தஞ்சாவூரில் இருந்து 48 கிமீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து 100 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கிறது. நல்ல சாலை வசதியும் உள்ளது.
பட்டுக்கோட்டையில் ரயில் நிலையம் உள்ளது. வாரத்திற்கு 13 ரயில்கள் இந்த நிலையத்தின் வழியாக இயக்கப்படுகிறது. சென்னை தாம்பரம், ராமேஸ்வரம், வேலைக்கண்ணி, எர்ணாகுளம், செங்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற இடங்களுக்கு இங்கிருந்து ரயில் வசதியுள்ளது.
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி. 100 கிமீ தொலைவில் உள்ளது.
கோயில் முகவரி
அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில்
நிர்வாக அலுவலகம்,
நாடியம்மாள்புரம்,
பட்டுக்கோட்டை – 614 602